Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘எதையாவது உடைச்சா நாமதான்யா காசு கட்டணும்’ வண்டிக்கு பின்னாடி கும்பலா வராதீங்க... ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை

சென்னை: 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டத்தை ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் நடத்தி வருகிறார். அதன்படி, இன்று தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரையை விஜய் மேற்கொள்கிறார். இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர், அண்ணா சாலை சந்திப்பில் தொடங்கி திருவாரூர் மாவட்டம் நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதியில் மதியம் 3 மணியளவில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் மதியம் 12.25 முதல் ஒரு மணிக்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். வரவேற்பு கொடுக்க உள்ள வாஞ்சூர் ரவுண்டானா பகுதி தமிழ்நாடு, புதுச்சேரி எல்லை என்பதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

விஜய் செல்லும் கேரவன் வாகனத்தின் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கு தாங்களே பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ளாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது.

அப்படி ஏற்படுத்தினால் அந்த கட்சியினரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் போன்ற 20 நிபந்தனைகளை காவல்துறை அக்கட்சிக்கு விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்து, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். முன்னதாக திருச்சி மற்றும் அரியலூரில் பிரசாரத்தில் விஜய்யை பார்க்க முண்டியடித்துக்கொண்டு வந்த கூட்டத்தில் சிக்கி பெண்கள் மயங்கி விழுந்தனர். மேலும், பொது சொத்துகளுக்கு தவெக தொண்டர்கள் சேதம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.