திண்டுக்கல்: திருநெல்வேலியில் இருந்து நேற்று காலை 6.15 மணிக்கு சென்னையை நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. காலை 8.45 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்து சென்றது. சில கிலோ மீட்டர் கடந்த நிலையில் வடமதுரை ரயில்நிலையத்திற்கு முன்பாக தாமரைப்பாடி கிராமப்பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்த போது இன்ஜினை அடுத்துள்ள பெட்டியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. தொடர்ந்து பெட்டி முழுவதும் புகை பரவ துவங்கியதால், அதிலிருந்த பயணிகள் அச்சமடைந்து அலறியடித்து கூச்சலிட்டனர். தகவலறிந்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர் புகை வந்த இடத்தில் சோதனை செய்தபோது ரயிலில் இருந்த ஏசி யூனிட்டில் இருந்து புகை கிளம்பியது தெரியவந்தது.
இதையடுத்து புகை வந்த பகுதியை லோகோ பைலட்கள் தற்காலிகமாக சரிசெய்தனர். மேலும், அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அருகிலுள்ள பெட்டிக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகை வருவது நின்றதையடுத்து வந்தே பாரத் ரயில் 30 நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து மெதுவான வேகத்தில் திருச்சி நோக்கி புறப்பட்டு சென்றது. திருச்சி ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ரயிலை ஆய்வு செய்தனர். அதன்பிறகு தொடர்ந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.


