Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வந்தே பாரத் ரயிலில் ஆர்எஸ்எஸ் பாடல் பாடிய விவகாரம் விசாரணை நடத்த கேரள கல்வித்துறை அமைச்சர் உத்தரவு

திருவனந்தபுரம்: எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பிரதமர் மோடி காணொலி மூலம் இந்த ரயில் உள்பட 4 புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். எர்ணாகுளம்-பெங்களூரு ரயில் தொடக்க விழாவில் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை தென்னக ரயில்வே தங்களுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து உடனடியாக எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. ரயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியது: வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆர்எஸ்எஸ் பாடல் பாடிய விவகாரத்தில் மாணவர்களை குறை கூற முடியாது. அரசு நிகழ்ச்சிகளுக்கு ஒரு வரைமுறை உள்ளது. இதில் அரசியல் கட்சிகளின் பாடல்களை பாடக்கூடாது.

எந்தப் பள்ளியாக இருந்தாலும் மதவாதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள அனுமதிக்க முடியாது. மாநில அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கினால்தான் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி கிடைக்கும். அரசின் நிபந்தனைகளை மீறினால் சான்றிதழை ரத்து செய்ய முடியும். இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய கல்வித் துறை அமைச்சரை நாளை (இன்று) சந்தித்து புகார் கூற தீர்மானித்துள்ளேன். அரசு நிகழ்ச்சிகள் ஆர்எஸ்எஸ் பாடல்களை பாடுவதற்கான மேடை அல்ல. இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.