சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனகோண்டா பாம்பு 10 குட்டிகளை ஈன்றது. சென்னை வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை வன விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதை காண தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய பாம்பு வகைகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா பாம்பு நேற்று காலை 10 குட்டிகளை ஈன்றது. இது, கடந்த ஆண்டு 9 குட்டிகளையும், மற்றொரு அனகோண்டா பாம்பு 11 குட்டிகளையும் ஈன்றது குறிப்பிடத்தக்கது. மேலும், அனகோண்டா பாம்பு 10 குட்டிகளை ஈன்றுள்ளதால் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த குட்டிகளை பூங்கா ஊழியர்கள் தனியாக ஒரு கண்ணாடி கூண்டில் அடைத்து பராமரித்து வருகின்றனர்.