வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.1.50 கோடி மானியம் தரப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை: வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ரூ.10 கோடி வரையிலான புதிய மதிப்புக்கூட்டுதல் திட்டங்களுக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அட்டவணைப்படி), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என்ற வகையில் அதிகபட்சமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இது தவிர அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்கள் தக்காளி, மிளகாய், மஞ்சள், வாழை, முருங்கை, மா, மல்லிகை, சிறுதானியங்கள் போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும், மீதமுள்ள தொகை வங்கி கடனாக பெறப்பட வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வங்கியில் கடன் ஒப்புதல் பெறப்பட்ட பின், மானியம் பெறுவதற்கான அவர்களுடைய விண்ணப்பங்கள் மாவட்ட தொழில்நுட்பக்குழு மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும். மானியத்தொகை அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வழங்கப்படும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். முதல் தவணையாக 60 சதவீத மானியமும், இரண்டாம் தவணையாக 40 சதவீத மானியமும் வேளாண் தொழில் முனைவோர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்படும்.