எங்களுக்கு எங்கள் மதிப்பு, எங்கள் பலம் தெரியும் தென் கொரியா நிறுவனம் ஆந்திராவுக்கு போனது ஏன்? அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம்
சென்னை: தென் கொரியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு போனது ஏன் என்பதற்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம் அளித்துள்ளார். எங்களுக்கு எங்கள் மதிப்பு, எங்கள் பலம் தெரியும் என்று கூறியுள்ளார். தென்கொரியாவை தலைமையிடமாக கொண்ட ஹ்வாசியுங் நிறுவனம், உலகின் மிக பிரபலமான பிராண்டான அடிடாஸின் முக்கிய சப்ளையர்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் ஸ்போர்ட்ஸ் காலணிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கிறது.
ஆரம்பத்தில், ஹ்வாசியுங் நிறுவனம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டானில் ரூ.1,720 கோடி முதலீட்டில் தனது உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால் ஒரு ஏக்கர் ஒரு ரூபாயில் ஆந்திர அரசு நிலம் தருவதாக வாக்குறுதி அளித்தது. அந்த நிறுவனம் ஆந்திராவின் குப்பத்தில் அமைகிறது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமர்சித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் இதற்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: முதலீட்டை மேம்படுத்துவது என்பது அன்றாட விளையாட்டு அல்ல. இது, ஒரு மாநிலத்திற்கு தேவையான குறிப்பிட்ட துறைகள், அதனால் உருவாகும் வேலைவாய்ப்புகள், முதலீடு செய்யப்படும் பகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை காண்பது ஆகும்.
சலுகைகள் வழங்குவதும், முதலீடுகள் தரையிறங்குவதும், நிறுவனம் எங்கு தங்கள் ஆலையை அமைக்க விரும்புகிறது என்பதை பொறுத்து, பகுதிக்கு பகுதி மாறுபடும். இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில், அரசுகள் தங்கள் பலம் மற்றும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கின்றன. சில அரசுகளிடம் வறண்ட நிலப்பரப்புகள் சலுகையாக கிடைக்கின்றன. ஆனால், மற்றவை அதிக மதிப்புள்ள நிலங்களை கொண்டுள்ளன. புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்பின் மதிப்பை ஒப்பிட்டுப் பார்க்காமல், சாதாரணமாக அந்த நிலங்களை வழங்கிவிட முடியாது.
நம்பத்தகாத தொகுப்புகளை வழங்குவதற்காக நாங்கள் எந்த நேரத்திலும் அடிமட்ட போட்டிக்கு செல்ல மாட்டோம். தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த நம்பகமான, தொழில்மயமாக்கப்பட்ட மாநிலமாகும். நாம் வேறு எந்த மாநிலத்தையும் விட ஒரு உற்பத்தி சக்தியாக இருக்கிறோம். எங்களுக்கு எங்கள் மதிப்பு தெரியும், எங்கள் பலம் தெரியும், நாங்கள் அதற்கு ஏற்றவாறு செயல்படுவோம்.
எதிர்க்கட்சிகள் சில பிரதிநிதிகள், தமிழகத்தின் நலனை முதன்மைப்படுத்தும் கடின உழைப்பாளி அரசாங்கத்தையும், அதன் அதிகாரிகளையும் குறைத்து மதிப்பிடவும், மாநிலத்தின் கடின உழைப்பாளி மக்களை அவமதிக்கவும் விரும்பினாலும், நாங்கள் அதிக முதலீடுகள் குறித்த அறிவிப்புகளால் அவர்களின் விஷ வாயை மூட விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


