*தோட்டத்தொழிலாளர்கள் பீதி
வால்பாறை : வால்பாறை அருகேயுள்ள கல்லார் எஸ்டேட் பகுதியில் 10 காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. குறிப்பாக யானைகள் தோட்டத்தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வலம் வருவதால் மக்கள் பீதியில்உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மானாம்பள்ளி வனச்சரகம், வால்பாறை வனச்சரகம் என இரண்டு வனச்சரகங்களை கொண்டது வால்பாறை பகுதி ஆகும். இங்கு, யானை, சிறுத்தை, கரடி, புலி, செந்நாய், காட்டுமாடு ஆகிய வனவிலங்குகள் அதிகளவில் உள்ளது.
காட்டு யானைகள் உணவுத்தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ரேஷன் கடை, சத்துணவு கூடம், தோட்டத்தொழொலாளர்களின் வீடு ஆகியவறை சேதப்படுத்தி வருகிறது.சில நேரங்களில் மனித வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள கல்லார் எஸ்டேட் பகுதியில் இரண்டு நாட்களாக 10 காட்டு யானைகள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் வந்தும், தோட்டப்பாதைகளில் நடமாடி வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ளவர்கள் சேர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நிற்கும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதி அருகிலேயே முகாமிட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு கல்லார் எஸ்டேட் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை தொடங்கினர். ஆனால், காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள சோலைக்குள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் யானைக்கு அருகே செல்ல வேண்டாம், யானை அருகில் சென்று செல்பி எடுக்ககூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யானைகள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லும் வரை வனத்துறையினர் கல்லார் எஸ்டேட் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.