மாறி வரும் இன்றைய யுகத்தில் நம்பிக்கைக்குரிய சில இளைஞர்கள் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திருநாளூர் சசிக்குமார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள திருநாளூரில் வசிக்கும் இவர், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமானவராக இருக்கிறார். அதற்கு காரணம் இவர் கையில் எடுத்தமூலிகைப் பயன்பாடுதான். அப்படி என்ன செய்கிறார் என்கிறீர்களா? அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஒரு சிறிய தள்ளுவண்டியில் மூலிகை தேநீர், மூலிகை சூப் தயாரித்து விற்பனை செய்கிறார். அதற்கான மூலிகைகள் அனைத்தையும் தாமே உற்பத்தி செய்து, மதிப்புக்கூட்டுகிறார். பெரிய அளவில் இல்லைதான். ஆனால் இந்த நடவடிக்கை தனக்கு மிகவும் நெகிழ்ச்சி தருகிறது என கூறும் சசிக்குமாரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தோம். வல்லாரை, கரிசலாங்கண்ணி, முசுமுசுக்கை என பல மூலிகைகளைக் கொண்டு தயார் செய்த ேதநீரை தயாரித்து நமக்குக் கொடுத்துவிட்டு, தனது வல்லாரை வயலைச் சுற்றிக் காண்பித்தபடியே பேச ஆரம்பித்தார்.
`` டிப்ளமோ ஹார்ட்டிக் கல்ச்சர் (தோட்டக்கலை) படிச்சிருக்கேன். படிச்சிட்டு சும்மா இருக்கக்கூடாதுங்குறதுக்காக மரம் வளர்ப்பு, இயற்கை வேளாண்மைன்னு சில நடவடிக்கைகளில் இறங்கினேன். அப்போ பள்ளிக்கூடங்களுக்கு போய் தோட்டம் அமைச்சிக் கொடுக்குறது, அரசாங்க அலுவலங்கள்ல மரம் வளர்க்குறதுன்னு சில வேலைகளை செஞ்சேன். அப்போ குகும்பூர் பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம்ங்குறவர் என்னைப் பத்தி கேள்விப்பட்டு பார்க்க வந்தாரு. உங்களைப் பத்தி கேள்விப்பேட்டேன். நீங்க என் கூட பயணம் பண்ணுவீங்களான்னு கேட்டாரு. அவரும் இயற்கை வேளாண்மை, மரம் வளர்ப்புல ஆர்வமா இருந்ததால அவர் கூட பயணம் செய்ய ஆரம்பிச்சேன். இதுக்கு இடையில வள்ளலார் பத்தி படிக்க ஆரம்பிச்சேன். அவர் மூலிகைகள் பத்தி ரொம்ப விரிவா பேசி இருக்குறதை தெரிஞ்சிக்கிட்டு அதைப்பத்தி நிறைய தேடல்கள்ல இறங்குனேன்.
தினமும் 5 மூலிகைகள் பயன்படுத்தணும், தூதுவளை, கரிசலாங்கண்ணி, முசுமுசுக்கை, வல்லாரை, புளியாரைன்னு இந்த அஞ்சு மூலிகைகளைப் பயன்படுத்துனா நோயில்லா வாழ்வு வாழலாம்னு அவர் சொன்னது எனக்கு ஒரு பாடமா அமைஞ்சுது. இதை ஏன் நாம் பயிர் செஞ்சி பயன்படுத்தக்கூடாதுன்னு அந்த மூலிகைகளை பயிர் செய்ய முடிவெடுத்தேன். திருநாளூர் கிராமத்துல எங்களுக்கு சொந்தமா ஒரு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல முதல்ல பயிர் செஞ்சேன். வல்லாரைக்கீரைக்கு நல்ல டிமாண்ட். அதே மாதிரி மத்த மூலிகைகளும் விற்பனையாக ஆரம்பிச்சது. இந்த மூலிகைகளை நாம மதிப்புக்கூட்டி விக்கலாம்னு தோணுச்சி. அதனாலபட்டுக்கோட்டை சாலையில சின்னதா ஒரு வண்டிக்கடையில இயற்கை ஜூஸ் ஸ்டாலை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல கொஞ்சம் சிரமமாத்தான் இருந்துச்சி. இப்போ நிறைய பேரு இங்க தேடி வந்து ஜூஸ், தேநீர் குடிக்கிறாங்க.
காலையில 5 மணிக்கு ஆரம்பிச்சி மதியம் 3 மணி வரைக்கும் இந்த கடை இருக்கும். இங்க தூதுவளை டீ, வல்லாரை ஜூஸ், கரிசலாங்கண்ணி கசாயம், புளியாரை சூப் ரொம்ப பிரபலமாகிட்டு வருது. இந்த டைம்ல எப்ப வந்தாலும் இந்த பானங்களை இங்க அருந்தலாம். தூதுவளையை மதிப்புக்கூட்டி டீ பாக்கெட், ரசப்பொடி, தனிப்பொடி, சூப் பொடி தயாரிச்சி விக்கிறேன். இதே மாதிரி மற்ற மூலிகைகள்ல இருந்து பொடிகள் தயாரிச்சி விக்க முயற்சி செய்றேன்.
எங்க ஊர் மட்டுமில்லாம ஆவணத்தான்கோட்டை, குறுந்தரக்கோட்டைன்னு மேலும் சில ஊர்கள்லயும் வல்லாரை, கரிசலாங்கண்ணி, முசுமுசுக்கை செடிகளை சாகுபடி செய்றேன். கரிசலாங்கண்ணில வெள்ளை கரிசலாங்கண்ணி, சிவப்பு கரிசலாங்கண்ணியை சாகுபடி செய்றேன். குத்தகை நிலங்கள்லயும், விவசாயிங்க கிட்ட கான்ட்ராக்ட் முறையிலயும் இதை செய்றேன். சிலர் தங்கள் வீடுகள்ல நடக்குற திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு மூலிகை தேநீர், சூப் தயாரிச்சி கொடுக்க என்னை கூப்பிட்டு போறாங்க. இப்போ பலருக்கும் மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கு. காலை எழுந்தவுடனே நாம இப்போ வழக்கமா குடிக்கிற டீக்கு பதிலா மூலிகை டீ தயாரிச்சி குடிச்சா நல்ல பலன்கள் கிடைக்கும். இதை எல்லோருமே உணரணும்ங்குறத மனசுல வச்சி பல ஊர்கள்லயும் இந்த ஜூஸ், தேநீர் கடையை ஆரம்பிக்கலாம்னு ஒரு திட்டம் இருக்கு. காலமும், சூழலும் நல்லா அமைஞ்சதுன்னா கண்டிப்பா அது நடக்கும்’’ என நம்பிக்கையோடு பேசுகிறார்.
தொடர்புக்கு:
சசிக்குமார்: 63858 86057.

