*கை, இயந்திர நடவுகள் மும்முரம்
வலங்கைமான் : வலங்கைமான் தாலுகாவில் தற்போது வரை சுமார் 70 சதவீத சம்பா நடவு பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் இம்மாத இறுதிக்குள் சம்பா பணிகள் நிறைவடைகிறது. 20 சதவீத அளவிற்கு தாளடி நடவு நடைபெற்றுஉள்ள நிலையில் அடுத்த மாதம் 15 தேதிக்குள் தாளடி நடவு நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது.
நடப்பாண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நேரடி விதைப்பு மூலம் சுமார் 20 சதவீத எக்டேர் நிலப்பரப்பும் இயந்திர நடவு மூலம் சுமார் 40 சதவீத எக்டேர் நிலப்பரப்பும்வழக்கமான விதை விட்டு கை நடவு மூலம் சுமார் 40 சதவீத எக்டேர் நிலப்பரப்பும் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் கை நடவு இயந்திரம் நடவு ஆகிய மூன்று முறைகளில் சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் செலவு குறைவு, பாசனநீர் சிக்கனம் உள்ளிட்ட மூன்று முக்கிய காரணங்களால் விவசாயிகள் நேரடி விதைப்பில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
புழுதி உழவு செய்து விதைப்பது மற்றும் சேற்று உழவு செய்து விதைப்பது என இரண்டு முறைகள் உள்ளனநேரடி விதைப்பில் புழுதி உழவு செய்து விதை விதைப்பது வழக்கம். பருத்தி மகசூல் முடிவு பெற்ற நிலையில் பருத்தி செடிகளை சேற்று உழவு செய்து பின்னர் நேரடி விதைப்பில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.அதற்கு அடுத்தபடியாக ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக பாய் நாற்றங்கள் அமைத்து பின்னர் இயந்திர நடவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக இயந்திர நடவு மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இயந்திர நடவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது விவசாயிகள் நடவு மேற்கொள்ள உள்ள வயலிலேயே எளிய முறையில் பாய் நாற்றங்கால் அமைத்து இயந்திர நடவு மேற்கொண்டு வருகின்றனர்.
வலங்கைமான் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் வழக்கமான கை நடவில் ஆட்கள் பற்றாக்குறை என்ற நிலையே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் நடப்பு சம்பா பட்டதில் சாகுபடி முன்னதாக சுமார்20 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள நிலையில் நெல் நடவு மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில்விதை விடும் பணி முடிவுற்றுள்ளது.
நீண்ட கால நெல் ரகங்கள் விதை விடும் பணி முன்னதாக முடிவு பெற்றதை அடுத்து விரைவில் சன்ன ரகத்திற்கான விதை விடும் பணி துவங்க உள்ளது. மேலும் 80 சதவீத அளவு பரப்பளவில் சம்பா நடவு மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் சேற்று உழவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீண்டகால ரகமாக இயந்திர நடவு மூலம் நடவு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,500 என்ற சொற்பத்தொகையில் நடவு பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். நடப்பு பருவத்தில் செப்டம்பர் மாத இறுதிக்குள் சுமார் 40 சதவீத அளவு சம்பா நடவு பணிகள் நடைபெற்றுள்ளது. தற்போது இதுவரை சுமார் 70% அளவிற்கு சம்பா நடவு பணிகள் நடைபெற்றுள்ளதுள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் தாளடி நடவு பணிகள் முடிவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.