*ஆட்கள் பற்றாக்குறைக்கு சிறந்த தீர்வு
வலங்கைமான் : வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சம்பா சாகுபடி இயந்திர நடவுமேற்கொள்வதற்கு பாய்நாற்றங்கள் அமைத்து விதைவிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது.
நடப்பாண்டு 20 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், நேரடி விதைப்பு மூலம் 40 சதவீத நிலப்பரப்பும் இயந்திர நடவு மூலம் 25 சதவீத ஹெக்டேர் நிலப்பரப்பும் வழக்கமான விதை விட்டு கை நடவு மூலம் 35 சதவீத ஹெக்டேர் நிலப்பரப்பும் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் கை நடவு இயந்திரம் நடவு ஆகிய மூன்று முறைகளில் சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆட்கள் பற்றாக்குறை, நிர்வாகச் செலவு குறைவு, பாசனநீர் சிக்கனம் உள்ளிட்ட மூன்று முக்கிய காரணங்களால் விவசாயிகள் நேரடி விதைப்பில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதற்கு அடுத்தபடியாக ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக பாய் நாற்றங்கள் அமைத்து பின்னர் இயந்திர நடவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, இயந்திர நடவு மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இயந்திர நடவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது விவசாயிகள் நடவு மேற்கொள்ள உள்ள வயலிலேயே எளிய முறையில் பாய் நாற்றங்கள் அமைத்து இயந்திர நடவு மேற்கொண்டு வருகின்றனர்.
பாய் நாற்றங்கால் என்பது நெல் நாற்றுகளை வளர்க்கும் ஒரு நவீன முறையாகும். இதில், விதைகள் ஒரு திடமான மேற்பரப்பில் (கான்கிரீட், பாலிதீன் ஷீட் அல்லது நாற்றுத் தட்டு) பரப்பிய மண் கலவையின் மீது சீராக விதைக்கப்பட்டு, பின்னர், அந்த நாற்றுத் தட்டை வயலில் பாய் போல உருட்டி நடவு செய்யப்படுகிறது.
இந்த முறை, தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைப்பதுடன், குறைவான செலவில் அதிக மகசூலைத் தரக்கூடியது, குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாரம்பரிய முறைகளை விட நவீனமான மற்றும் மேம்படுத்தப்பட்ட நாற்றங்கால் உருவாக்கும் முறையாகும்.வேலையாட்கள் பற்றாக்குறைக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதன் மூலம் உற்பத்திச் செலவு குறைகிறது. ஒற்றை நடவு செய்வதன் மூலம் மகசூல் அதிகரிக்கிறது.
இயந்திர நடவுக்கு ஏற்ற நாற்றுகளை உருவாக்க இது உதவுகிறது, மேலும் நாற்றுக்கள் சீராக வளரும்.கான்கிரீட் தரை, பாலிதீன் தாள், அல்லது நாற்றுத் தட்டுகள் போன்ற திடமான மேற்பரப்பில் இந்த நாற்றங்கால் அமைக்கப்படுகிறது. மெல்லிய அடுக்காக பரப்பப்பட்ட மண் கலவையின் மீது விதைகள் சீராக விதைக்கப்படும்.இந்த நாற்றுத் தட்டுகள் பாய் போல உருட்டி எடுக்கப்பட்டு வயலில் நடவு செய்யப்படுகின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி போன்ற நெல் சாகுபடியின் மூன்று போகங்களிலும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த நாற்றங்கால் முறை காலம் மற்றும் செலவு குறைவான சாகுபடி முறையாகும். வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எந்திர நடவு செய்ய ஏற்ற வகையில் பாய் நாற்றங்கால் முறையில் விதை விடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.