எத்தனையோ அறிவியல் வந்தாலும் , புடவைக்கு கச்சிதமாக வளையல் அணியும் பழக்கம் மட்டும் மாறாது. இன்றும் பண்டிகை என்றால் முதலில் வரும் கடைகள் வளையல் கடைதான். வளையல் வாங்குவதற்காகவே ஹைதராபாத் செல்லும் மக்கள் கூட இன்றும் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு இந்திய கலாச்சாரத்தில் வளையல்களுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. அதிலும் திருமணம், வளைகாப்பு என எதிலும் வளையல்களுக்கு முதலிடம் உண்டு. வளையல் என்றால் முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கண்ணாடி வளையல்கள். இந்த கண்ணாடி வளையல்களை செய்வதில் மிகவும் பிரபலமான இடம் உத்தரபிரதேசத்திலுள்ள பெரோஷாபாத். ஆக்ராவிலிருந்து 47 கிலோ மீட்டரில் உள்ளது. இங்கு 200 வருடங்களாக கண்ணாடி வளையல்கள் செய்து வருகின்றனர். 991 கண்ணாடி ஊதும் தொழிலகங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 200 நபர் வேலை பார்க்கின்றனர். வீட்டிலிருக்கும் பெண்களுக்கான வேலை வீட்டுக்குள்ளேயே தொழிலகம். இந்த பகுதியில் நிறைய சிலிகா கிடைக்கிறது. குறைந்த கூலிக்கும் ஆட்கள் கிடைக்கின்றனர். பிறகு…? 1500 டிகிரி செல்சியஸ் பர்னஸில் வைத்து அடிப் படையாக கண்ணாடி வளையல்கள் உருவாக்கப்படுகின்றன. சூடு ஆறியதும், தரம் பிரிக்கப்படுகின்றன.
ஒரு கல்லால் வளையலை தட்டினால் உடைந்தால் மீண்டும் மறு சுழற்சிக்கு அனுப்பப்படும். 16000 கண்ணாடி வளையல்களை சோதித்து முடிவு கூறினால் 50 ரூபாய் சம்பளம். பிறகு அவை மேல் வடிவமைப்புக்காக, அழகுபடுத்துதல், வண்ணம் தீட்டுதலுக்காக ஒப்படைக்கப்படுகிறது. அதன் பிறகு பேக்கிங் செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு வருகிறது.அமிலங்கள், வெப்பம், கண்ணாடி என்பதுதான் இதில் உள்ள பெரும் பிரச்னை.திடமான (Solid), வட்டம், பிரித்து ஸ்பிரிங் மூலம் இணைத்தல் என ரகங்கள், மேலும் வெள்ளை, ரோஸ்கோல்ட், வெள்ளி, பிளாட்டினம், மாணிக்கக் கற்கள் இணைந்த வளையல்கள். மண், உலோகம், மரம், கண்ணாடி, பிளாஸ்டிக், பிசின், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், இரும்பு உலோகங்கள் என பலவற்றில் வளையல்கள் உருவாக்கப்படுகின்றன.பெரோஷா பாத்தில், காலி போக்ராம் (Gali bogram) என ஒரு மார்க்கெட் உள்ளது. இது முழுவதுமே வளையல் கடைதான். அங்கே எப்போதும் கூட்டம் அலைமோதும். மிகப் பெரிய வளையல் மார்க்கெட் ஹைதராபாத்தில் உள்ள Choodi Bazacer (சூடி பஜார்).
சார்மினாரிலிருந்து 4 பக்கமும் சாலை பிரியும். அதில் ஒரு தெருவில் உள்ளது. இங்கு அரக்கு வளையல்கள் பிரபலம். சுதந்தரம் பிரிவு என வந்த போது பெரோஷாபாத் கண்ணாடி வியாபாரிகள் பயந்து, முஸ்லீம் ராஜ்யமான ஹைதராபாத்தில் குடியேறினர். வளையல் உற்பத்தியாளர்களுக்கு பெரோஷாபாத்திலும், ஹைதராபாத்திலும் இன்று வரை பிரச்னை இல்லை.இதேபோல் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலும், வளையல் மார்க்கெட் பிரபலம்.1727ல் மகாராஜா சவாய் ஜெய்சிங் -2 கலைகளை வளர்க்க, வளையல் செய்பவர்களுக்கு ஆதரவு அளித்து குடியேறச் செய்தார். ராஜஸ்தானில் சுடா (Chuda) வளையல்கள் பிரபலம். ஜெய்ப்பூரில் முகலாயர் இந்திய கலாச்சாரம் இணைந்த வண்ண வண்ண வளையல்களை காணலாம். ஐதராபாத்தில் முற்றிலும் கற்களால் ஆன வளையல்கள் பிரபலம். பூக்கள் வடிவமைப்பிலும் காணலாம். பாசி வளையல்கள், நூல் வளையல்களும் அங்கே பிரபலம்.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் கற்கள் பதிக்கப்பட்ட வளையல்கள் பிரபலம்.பெங்காலியரின் மேல் மட்டத்தினரிடம் தங்கத்தால் ஆன வளையல் நிச்சயம் உண்டு. பஞ்சாபில் யானை தந்தத்தில் ஆன வளையல்கள் அணிவது பிரபலம்.வங்காளத்தில் சங்கு வளையல்கள். இப்படி மாநிலத்துக்கு மாநிலம் வளையல்களில் ரகங்கள் மாறுவது உண்டு. அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் விழாவின் போது வளையல் அலங்காரம் செய்வது ஒரு வழக்கம். கோவை ரேஸ்கோஸ் சாரதாம்பாள் கோயிலில் 1,25,000 வளையல்களை பயன்படுத்தி அலங்காரம் செய்திருப்பர். பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.கடவுளுக்கும் வளையலுக்கும் சம்பந்தம் உண்டு.சிவன்-பார்வதி காலத்திலேயே லக்கெரா என்ற வளையல் தயாரிப்பாளர்கள் இருந்துள்ளனர். அவர்களிடம் சிவன் வளையல்களை வாங்கி, வருங்கால மனைவிக்கு பரிசளித்ததாக ஐதீகம். பார்வதி அதனை திருமணத்தின்போது அணிந்து கொள்வார் என்பர். இந்தப் பழக்கம் தான் இன்றும் திருமண பெண்கள், வளையல்களை புதிதாக வாங்கி அணிகின்றனர். குறிப்பாக தாய்மாமன் - அத்தை வளையல் போட்டுவிடும் வழக்கம். ஒரு சில குடும்பத்தில் மணமகன் வீட்டிலிருந்து மணமகளுக்கு வளையல் போடுவர். மெஹந்தி போடும் விழா வடக்கில் பிரபலம் எனில் திருமணம் வளையல் போடும் நிகழ்வு இங்கே தமிழகத்தில் பிரபலம். அத்துடன் சிவன் வாங்கியது கண்ணாடி வளையல் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தங்க வளையல்களுடன் கண்ணாடி வளையல்களும் உண்டு.
சீமந்தத்தின் போது கர்ப்பவதிக்கு வளையல்களை அடுக்குவர். பிறகு உறவினர்கள், வந்த பெண்களுக்கு வளையல்களை அன்பளிப்பாக வழங்குவர். அதன் சப்தம், தாய்க்கு மட்டுமல்ல, தாயின் மடியில் உள்ள குழந்தைக்கும் கேட்டு, சந்தோஷத்தை ஏற்படுத்துமாம். இதனால் அதன் காது கூர்மை, மூளை செயல்பாடு சிறப்பாக அப்போதே துவங்கி விடுமாம். மேலும் கண்ணாடி வளையல்கள் என்கிறதால் வயிற்றில் குழந்தை இருக்கும் போது தூங்கும் போது கூட கவனம் வேண்டும் என்பதாலேயே இந்த வளைகாப்பு வளையல்கள். பாதுகாப்பு வளையம் எனவும் சொல்லலாம். நம் ஊர்களில் திருவிழாக்கள், கண்காட்சிகளில் முக்கிய இடம் பிடிப்பது வளையல் கடைகள். அதனை சுற்றி பெண்கள் கூட்டம் மொய்க்கும்.பல மாநில பெண்கள் திருமண சமயங்களில் இரண்டு பெரிய வளையல்கள், நடுவில் சிறு வளையல்கள் என இணைந்து அணிவர். குழந்தை முதல் பாட்டிவரை அனைவரையும் கவரும் முக்கிய விஷயம் வளையல்.
- வர்ஷினி, ராஜிராதா

