Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை!!

டெல்லி: வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினர். இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பிற மூத்த தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

வாஜ்பாய், 1996ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரைக்கும், அதன்பின் 1998ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் 2004 மே 22ம் தேதி வரைக்கும் பிரதமராக இருந்துள்ளார். மொராஜி தேசாய் அரசில் 1977 முதல் 1979 வரை வெளியுறவுத்துறை இணை மந்திரியாக இருந்துள்ளார். மோடி பிரதமரான பின், வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி, ஒவ்வொரு வருடமும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சேவையை, அவரது நினைவு நாளில் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; வாஜ்பாயின் நினைவு நாளில், நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும், அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவரது அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும் முக்கிய பங்கு வகிக்கிறது. தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கு பங்களிக்க அனைவரையும் அவரது பணி ஊக்குவிக்கிறது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.