Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அரசு நிதியில் கட்டணமில்லா ஆன்மிக பயணங்கள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு 1,514 பக்தர்களும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கு 920 பக்தர்களும், அறுபடை வீடுகளுக்கு 2,615 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த நிதியாண்டில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு 2,000 பக்தர்கள் கட்டணமின்றி ஆன்மிக பயணமாக அழைத்துச் செல்லப்படுவர் என்ற சட்டமன்ற அறிவிப்பை நிறைவேற்றிடும் வகையில் இன்றைய தினம் 2ம் கட்டமாக, சென்னையில் பங்கேற்ற 70 பக்தர்களுக்கு பயணவழி பைகள் மற்றும் கோயில் பிரசாதத்தை அமைச்சர் சேகர்பாபு வழங்கி, ஆன்மிக பயணத்தை தொடங்கி வைத்தார்.

இதேபோல் காஞ்சிபுரம் மண்டலத்தில் 60 பக்தர்களும், விழுப்புரம் மண்டலத்தில் 71 பக்தர்களும், திருச்சி மண்டலத்தில் 70 பக்தர்களும், தஞ்சாவூர், மற்றும் மயிலாடுதுறை மண்டலங்களில் 70 பக்தர்களும், மதுரை மண்டலத்தில் 70 பக்தர்களும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களில் 80 பக்தர்களும் என 491 பக்தர்கள் புரட்டாசி மாத ஆன்மிக பயணத்தில் பங்கேற்றனர். சென்னையில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயில், திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயில், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்து தரப்பட்டு, காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் கோ.செ.மங்கையர்க்கரசி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.