மீரட்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் மீரட் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ராகுல் - அஞ்சலி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஆனால் அஞ்சலிக்கு, அஜய் என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் கணவர் ராகுலுக்குத் தெரியவந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி, தனது காதலன் அஜயுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார். அவர்களின் திட்டப்படி, ராகுலை வயல்வெளிக்கு அஜய் நைசாக பேசி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ராகுலை துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுக் கொன்றுவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர்.
ஆரம்பத்தில் இது ஒரு கொள்ளைச் சம்பவம் என போலீசார் சந்தேகித்தனர். ஆனால், கணவன் இறந்த துக்கத்தில் இருப்பது போல நடித்த அஞ்சலி, திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. விசாரணையில், அஞ்சலி தனது காதலன் அஜயுடன் ஊரை விட்டே தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் தீவிரமாகத் தேடிவந்த போலீசார், அக்வான்பூர் கிராமத்தில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையின் போது, அஞ்சலிதான் இந்த கொலையின் மூளையாகச் செயல்பட்டு திட்டம் தீட்டிக் கொடுத்ததாக அவரது கள்ளக்காதலன் அஜய் உண்மையை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

