Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்தராகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்பு

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் காணாமல்போன 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் தரளி கிராமத்தில் ஆகஸ்ட் 5ல் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணி வேகமெடுத்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் தலாலி என்ற கிராமம் மலை பகுதியில் அமைந்துள்ளது. தராலி கிராமம் ஆன்மிக தலமாக கருதப்படும் கங்கை உற்பத்தியாகும் இடமான கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் உள்ளது. அதனால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி தராலியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த அதிகனமழை காரணமாக, கீர் கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. மலையில் இருந்து ஆர்ப்பரித்து வந்த வெள்ளம், தராலியில் இருந்த 25-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், வீடுகளை அப்படியே வாரிச்சுருட்டி சென்றது. இதில் ஏராளமானோர் சிக்கி மாயமானார்கள். மேலும் 4 பேர் பலியானார்கள்.

உடனடியாக தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர், இந்தோ-திபெத் படையினர், ராணுவத்தினர் சம்பவ இடத்துக்க விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பலரில், இதுவரை 274 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் பலியானவர்களில் ஆகாஷ் பன்வார் (35) என்பவர் உள்பட 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 50 பேர் மாயமாகி உள்ளனர். இதில் ஹர்சில் ராணுவ முகாமில் இருந்த ராணுவ வீரர்களும், கேரள சுற்றுலா பயணிகளும் அடங்குவர். அவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீட்பு பணி குறித்து தேசிய பேரிடர் மீட்புக்குழு டிஐஜி மொஹ்சென் ஷாஹேதி கூறுகையில், ‘எங்களது மீட்பு குழுவின் 3 குழுக்கள் தாராலிக்கு செல்லும் வழியில் உள்ளன. தொடர்ச்சியான நிலச்சரிவுகள் காரணமாக ரிஷிகேஷ்-உத்தரகாசி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களால் செல்ல முடியவில்லை. இருப்பினும் மாற்று வழியை யோசித்து வருகிறோம்.

டேராடூனில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் விமானம் மூலம் அனுப்பப்பட உள்ளன. ஆனால் மோசமான வானிலையால் அவர்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை, நிலச்சரிவு, பெருவெள்ளம் ஆகியன மீட்பு பணிக்கு தடைகளாகவும், சவாலாகவும் உள்ளன. இருப்பினும் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது’ என்றார்.