ருத்ரபிரயாக்: உத்தரகாண்டில் இரண்டு மாதங்களுக்கு முன் மழையின்போது மாயமான 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் செனகாடு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். அதில் நேபாளத்தை சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் உள்பட ஒன்பது பேரும் அடங்குவர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.
இந்நிலையில் காணாமல் பேன ஒன்பது பேரில் ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வௌ்ளிக்கிழமை இரவு இரண்டு பேரின் சடலங்களும், நேற்று முன்தினம் ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதில் ஒருவர் குப்ட்காஷி பகுதியில் உள்ள உச்சோலா கிராமத்தை சேர்ந்த வனத்தொழிலாளி குல்தீப் சிங் நேகி(25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மீதமுள்ள உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
