Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உத்தரகாண்ட் நிலச்சரிவின் மீட்பு பணியில் தாயின் மார்பை அணைத்தபடி இரட்டை குழந்தைகளின் சடலம் மீட்பு: காண்போர் நெஞ்சை பதறவைத்த சோகம்

சமோலி: உத்தரகாண்ட் நிலச்சரிவில் இறுதி நிமிடம் வரை தன் பிள்ளைகளை காக்க போராடிய தாயின் பாசப்போராட்டம் சோகத்தில் முடிந்தது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் நந்தநகர் பகுதியில் கடந்த 17ம் தேதி இரவு ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவத்தில் பல வீடுகள் இடிபாடுகளில் புதைந்தன. இதைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், இடிபாடுகளில் இருந்து தாய் மற்றும் அவரது இரட்டை குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.

மாயமானவர்களை தேடும் பணியின் போது, தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உடல்கள் ஒன்றாக மீட்கப்பட்ட காட்சி காண்போரை கலங்கடித்துள்ளது. மீட்புக்குழுவினர் இடிபாடுகளை அகற்றியபோது, 38 வயதான காந்தா தேவி என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தனது 10 வயது இரட்டை மகன்களான விஷால் மற்றும் விகாஸ் ஆகிய இருவரையும் தனது மார்போடு இறுக்க அணைத்தபடி இறந்து கிடந்தார். ‘இறுதி நிமிடம் வரை தன் குழந்தைகளை காப்பாற்ற அந்த தாய் போராடியிருக்கலாம்’ என்பதைப் போல அந்த காட்சி அமைந்திருந்தது.

இதே இடிபாடுகளில் சிக்கியிருந்த காந்தா தேவியின் கணவர் குன்வர் சிங், 16 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கடந்த 18ம் தேதி உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால், தனது மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்த செய்தி கேட்டு அவர் நிலைகுலைந்து போனார். தனது மொத்த குடும்பத்தையும் ஒரே நாளில் இழந்த சோகத்தில் அவர் மூழ்கியுள்ளார். இந்த துயர சம்பவம் நந்தநகர் பகுதி மக்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உத்தரகாண்ட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.