டேராடூன்: வட மாநிலங்களில் மேக வெடிப்பின் காரணமாக குறிப்பிட்ட சில இடங்களில் திடீரென பெய்யும் அதிக கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகிறது. உத்தரகாண்ட்டின் சாமோலி மாவட்டத்தின் நந்தகரில் நேற்று பெய்த கனமழையை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
இதேபோல் குந்தாரி கிராமத்தில் அரைடஜனுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேரை காணவில்லை. மேலும் துர்மா கிராமத்தில் 2 பேர் மாயமாகியுள்ளனர். அங்கு மோஷா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது பல கட்டிடங்களை சேதப்படுத்தியது. உள்ளூர் நிவாரண மற்றும் மீட்பு குழுக்கள் காணாமல் போனவர்களை தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மழை, நிலச்சரிவு சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.