சாமோலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டத்தில் பெண் பலியானார். பலர் மாயமானார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகண்டில் மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், உத்தரகண்டின் ஹர்சில் மற்றும் தரலியில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது, இதனால் பலர் காணாமல் போயினர்.
அங்கு மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் சாமோலி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதில் சக்வாரா கிராமத்தில், ஒரு கட்டிடத்திற்குள் ஒரு பெண் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து பலியானார். பல இடங்களில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மண்ணில் புதைந்தன. பலரை காணவில்லை. தாராலி சந்தைப் பகுதி மற்றும் தாராலி தாலுகா வளாகம் ஆகியவை இடிபாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
செப்டன் சந்தைப் பகுதியில் உள்ள சில கடைகளும் சேதமடைந்தன. தாராலி-குவால்டம் சாலை மற்றும் தாராலி-சக்வாரா சாலை மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. ருத்ரபிரயாக் மற்றும் ஜோஷிமத்திலிருந்து மீட்பு பணியில் ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார். இதற்கிடையே உத்தரகாண்டில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜார்க்கண்டில் 5 பேர் பலி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மாயமாகி உள்ளார்.
ராஞ்சி மாவட்டம் பிஸ்கா நிலையத்துக்கருகே கட்டுமானத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் இருபுறத்திலும் கான்கிரீட் பலகைகள் இடிந்து விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜஸ்தானில் கனமழை, வௌ்ளம்: ராஜஸ்தானில் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று காலை வரை 10 செமீக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது.