Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பால் பயங்கரம் 70 பேர் மண்ணில் புதைந்தனர்: கீர் கங்கா நதியின் வெள்ளப்பெருக்கில் கிராமமே அடித்துச் செல்லப்பட்டது; 4 சடலங்கள் மீட்பு; மேலும் பலி எண்ணிக்கை உயரும் அபாயம்

உத்தரகாசி: உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட மேகவெடிப்பால், கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர கிராமமே அடித்துச் செல்லப்பட்டது. இதில், 70க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். மலைப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் 10 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளனர். இந்த பயங்கர இயற்கை பேரிடரில் 4 பேரின் சடலம் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்த பகுதிகளில், பல அடி உயரத்திற்கு சேறு குவிந்து கிடப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சேறும், சகதியுமாக பயங்கர வேகத்தில் பாய்ந்து வந்த காட்டாற்று வெள்ளம், நேற்று மதியம் 1.45 மணி அளவில் தாராலி கிராமத்தை நெருங்கியது. அப்போது, கரையை தாண்டி வெள்ளம் பாய்ந்து, சில நொடிகளில் தாராலி கிராமத்தையே ஒட்டுமொத்தமாக சூறையாடியது.

அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வீடுகள், கார்கள், மரங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மூன்று, நான்கு மாடி கட்டிடங்கள் சீட்டு கட்டு போல சரிந்தன. வெள்ள நீருடன் வந்த சேற்றில் பாதி கிராமமே முழுவதும் மூழ்கியது. கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் தாராலி கிராமம் முக்கிய தங்குமிடமாக அமைந்துள்ளது. இதனால் இங்கு ஏராளமான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் 40 முதல் 50 கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில், பலரும் உயிருடன் மண்ணில் புதைந்துள்ளனர். சுமார் 60 முதல் 70 பேர் வரையிலும் உயிருடன் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முதற்கட்ட தகவலின்படி, வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலியாகி இருப்பதாக உத்தரகாசி கலெக்டர் பிரசாந்த் ஆர்யா தெரிவித்துள்ளார். ஆனால் எத்தனை பேர் மண்ணில் புதைந்தனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுமட்டுமின்றி, ஹர்ஷில் பகுதியில் உள்ள ராணுவ முகாமும் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்தது. இந்த முகாமில் இருந்து 8 முதல் 10 ராணுவ வீரர்கள் வரை மாயமாகி உள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்களா அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

வெள்ளம் கோர தாண்டவமாடிய பகுதிகளில் பல அடி உயரத்திற்கு சேறுகள் குவிந்துள்ளன. இதனால் அவற்றில் பலரும் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவப் படையினர் தாராலி கிராமத்திற்கு விரைந்துள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 7 மீட்புக் குழுக்களை அனுப்ப உத்தரவிட்டார். ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஆனாலும், ஹர்சிலின் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இருந்து மட்டுமே வீரர்கள் உடனடியாக 4 கி.மீ தூரத்தில் உள்ள தாராலி கிராமத்திற்கு செல்ல முடிந்தது. முகாமில் சில வீரர்கள் மாயமான போதிலும், மற்ற ராணுவ வீரர்கள் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். 100க்கும் மேற்பட்ட சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மற்ற மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட இடங்களை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர்ளையும் மீட்பு பணியில் ஈடுபடுத்த முடியவில்லை என்றும் உத்தரகண்ட் முதன்மைச் செயலாளர் ஆர்.கே. சுதான்ஷு கூறி உள்ளார். இன்று தான் முழு அளவில் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘உத்தரகாசியின் தாராலியில் நடந்த இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

* அடுத்தடுத்து மேகவெடிப்பு

மலையின் இரு பக்கங்களில் இருந்தும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தாராலி மட்டுமின்றி ஆற்றின் மறுபுறம் உள்ள சுக்கி கிராமமும் பாதிக்கப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை செயலாளர் வினோத் குமார் சுமன் கூறி உள்ளார். இதுதவிர, சுகி டாப் என்கிற பகுதியிலும் அடுத்தடுத்து மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

* மேகவெடிப்பு என்றால் என்ன?

இமயமலையில் மிகவும் பேரழிவு தரும் இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக மேக வெடிப்புகள் கருதப்படுகின்றன. மிகக் குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மிகப்பெரிய அளவிலான மழை பெய்வதே மேகவெடிப்பு எனப்படும். அதாவது, 20-30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பலத்த காற்று மற்றும் மின்னலுடன் மணிக்கு 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்வது மேகவெடிப்பு எனப்படுகிறது. இமயமலைத் தொடரில் அமைந்துள்ளதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை வழக்கமானதாக இருக்கிறது. ஆனாலும் விரைவான நகரமயமாக்கம், விதிமீறிய கட்டிடங்கள், பருவநிலை மாற்றம் ஆகியவை காரணமாக மேகவெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

* சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் மக்கள் சிக்கிய கோர காட்சிகள்

தாராலி கிராமத்தை நோக்கி கீர் கங்கா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் சீறிப் பாய்ந்து வருவதை உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அதில், சில நொடிகளில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது தெரிகிறது. அதே சமயம், உயிர் தப்பிக்க மக்கள் பலரும் கட்டிடங்களுக்கு நடுவே ஓடும் போதும் அவர்களை வெள்ளம் வாரி சுருட்டி இழுத்துச் செல்லும் கோர காட்சிகளும் பதிவாகி உள்ளன. சிலர் சேதமடைந்த கட்டிடங்களில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.