உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் மாயம் ஆகியுள்ளனர். உத்தரகாசியில் மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. இதனால் கரையோர கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கீர்கங்காவின் மறுபுறத்தில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியது. கீர்கங்கா ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் பலர் மண்ணில் புதையுண்டதாக தகவல் வெளியானது.
வீடுகளை அடித்துச் சென்ற காட்டாற்று வெள்ளம்
கீர்கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சியானா சட்டி என்ற இடத்தில் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் யமுனோத்திரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. தரலி பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பல கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் வெள்ளத்தால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். உத்தரகாசி இயற்கை பேரிடரால் ஏற்பட்ட உயிர்சேதம் குறித்து இதுவரை தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.