உத்தரகாண்ட்: இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் திடீரென கொட்டும் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.
நேற்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. அப்போது திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்து செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன. இந்த மேகவெடிப்பில் சிக்கி 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ஒன்றிய அரசும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண தொகையை அளித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மழை நின்ற பிறகே உண்மையான பாதிப்புகள் கணக்கெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2,500 சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர் கேதார்நாத் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
6 கட்டிடங்கள் இடிந்தது
நந்தநகர் நகர் பகுதியில் இன்று 6 கட்டிடங்கள் இடிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 10 பேர் மாயமாகினர். தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படைமற்றும் மாவட்ட குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.