அமெரிக்காவின் அடாவடி வரி விதிப்பால் உத்தரப் பிரதேச ஏற்றுமதி கடும் சரிவு: கோடிக்கணக்கான ஒப்பந்தங்கள் ரத்து
லக்னோ: அமெரிக்காவின் புதிய வரிவிதிப்புக் கொள்கையால் உத்தரப் பிரதேச ஏற்றுமதித் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், மாற்றுச் சந்தைகளைத் தேடி ஏற்றுமதியாளர்கள் தீவிரமாக அலைந்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய இறக்குமதிகள் மீது சமீபத்தில் 50% வரியை விதித்தார். இந்த நடவடிக்கையால், உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதித் துறையில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படவிருந்த சரக்குகளில் சுமார் 20% ஒப்பந்தங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தேக்கமடைந்துள்ளதால், வரும் மாதங்களில் கடுமையான இழப்புகளைச் சந்திக்க நேரிடுமோ? என்ற கவலையில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், ஏற்றுமதியாளர்கள் மாற்றுச் சந்தைகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குறிப்பாக, இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள நாடுகளின் மீது கவனம் செலுத்துகின்றனர். கைவினைப் பொருள்கள், தரைவிரிப்புகள் மற்றும் பாரம்பரியப் பொருள்கள் உற்பத்தியில் வலுவாக உள்ள உத்தரப் பிரதேசத்திற்கு, இந்த மாற்றுச் சந்தைகள் வணிக அளவையும் லாபத்தையும் தக்கவைக்க உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர். இதுகுறித்து இந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் மன்மோகன் அகர்வால் கூறுகையில், ‘அமெரிக்காவின் வரி விதிப்பால் உத்தரபிரதேச மாநிலத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை கடுமையாகப் பாதிக்கப்படும்.
இன்றைய சூழலில் ஐரோப்பா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் புதிய சந்தைகள் நமக்கு சாதகமாக இருந்தால், அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பு கணிசமாகக் குறையும்’ என்றார். ஏற்றுமதியாளர்கள், உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கு மாநில அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.