ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவந்தது. இதை பயன்படுத்தக்கூடாது எனபேரூராட்சி சார்பில் பல முறை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், அவற்றை தடுக்க வேண்டும் என்றும் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டார்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பா.செல்வஇளவரசி தலைமையில்சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் நேற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் சோதனை நடத்தினர். பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த ஓட்டல்கள், பேக்கரிகள் , மளிகைகடை அவர்களின் குடோன்களில் சோதனை செய்து 7500 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து வியாபாரிகளிடம் ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். ‘’ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் இரட்டிப்பாகும். அத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.