ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை-திருவள்ளுர் நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆரணியாற்றின் குறுக்கே, கடந்த 2021ம் ஆண்டு ₹27 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டி, வாகன பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது. இதன் வழியே ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், பேரண்டூர், பனப்பாக்கம், சூளைமேனி பகுதி மக்கள் திருவள்ளூர் செல்வதற்கு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பஸ் வசதி இல்லாததால், இருசக்கர வாகனங்களில் கடந்து செல்வதற்கு பயன்படுத்தி வந்தனர்.
இப்பாலத்தில் கடந்த சில மாதங்களாக மழைநீரும் ஏராளமான மணல் திட்டுகளும் தேங்கி கிடந்தன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மணல் திட்டுகளில் தடுமாறி கீழே விழுந்து அடிபட்டு வந்துள்ளனர். இப்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீர், மணல் திட்டுகளை முறையாக அகற்றி பராமரிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் புகார் அளித்தனர்.
இதுகுறித்து தமிழ்முரசு நாளிதழிலும் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, ஆரணியாற்று மேம்பாலத்தில் கடந்த 2 நாட்களாக தேங்கியிருந்த மழைநீர் மற்றும் மணல் திட்டுகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. பின்னர், நேற்று மாலை பாலத்தில் முழுமையாக மணல் திட்டுகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன. இப்பாலத்தை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் கூறுகின்றனர்.