*கிலோ ரூ.10க்கு விற்பனை
*விவசாயிகள் வேதனை
ஊத்தங்கரை : ஊத்தங்கரை அருகே கானம்பட்டியில், பச்சை கத்தரிக்காய் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மாரம்பட்டி, கானம்பட்டி, கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாம்பாறு அணை பாசனத்தில் கத்தரிக்காய் சாகுபடி பிரதானமாக உள்ளது.
குறிப்பாக சுமார் 100 ஏக்கருக்கு மேல் பச்சை கத்தரிக்காய் பயிரிடுவது வழக்கம். 6 மாதம் பராமரிப்பதன் மூலம் பச்சை கத்தரிக்காய் விளைச்சலுக்கு தயாராகும். சாகுபடி செலவாக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் தேவைப்படும். இந்தாண்டும் பரவலாக பச்சை கத்தரிக்காய் சாகுபடி செய்து காய்களை பறித்து வருகின்றனர். இங்கிருந்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால், இந்த ஆண்டு விலை குறைந்துள்ளது. கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையிலும் விற்பனையாவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். கடந்தாண்டு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இவ்வளவு குறைவான விலையை விவசாயிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
எனவே, கத்தரிக்காய் சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி செல்வம் கூறுகையில்: இவ்வளவு குறைவான விலைக்கு எப்போதும் கத்தரிக்காய் விற்பனையானதில்லை. எனவே, வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்து நிவாரண உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.