ஊசூர் அடுத்த குருமலையில் தொடரும் வினோத நிகழ்வு ஓரிடத்தில் திரண்டு இறந்தவர்களின் ஆவிகளை வீட்டிற்கு அழைத்து படையலிட்ட மலைவாழ் மக்கள்
*அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்
அணைக்கட்டு : ஊசூர் அடுத்த குருமலையில் ஓரிடத்தில் திரண்டு இறந்தவர்களின் ஆவிகளை வீட்டிற்கு அழைத்து படையலிட்ட மலைவாழ் மக்கள் பின்னர் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சி குருமலை பகுதியில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல் மலை, பள்ளகொல்லை மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.
மலைப்பகுதியில் நடைபெறும் பல்வேறு வினோத நிகழ்வுகளில் ஒன்று இறந்தவர்களின் ஆவிகளை வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு ஜூன் மாதம் மலைவாழ் மக்கள் ஓரிடத்தில் திரண்டு சிறப்பு பூஜைகள் செய்து கடந்த ஓராண்டில் இறந்தவர்களின் ஆவிகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதன்மூலம் தொடர்ந்து ஒரு மாதம் முழுவதும் இறந்தவர்களின் ஆவி வீட்டில் இருப்பதாக நம்பிய மக்கள் அதற்கு படையல் வைப்பது, குறி கேட்பது போன்றவைகளை செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து குலதெய்வமாக வழிபட்டு வரும் தஞ்சியம்மன், செல்லியம்மனுக்கு திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடந்த வாரம் தஞ்சியம்மனுக்கு திருவிழாவை நடத்தினர்.
இதற்காக மலைப் பகுதியில் ஓர் இடத்தில் திரண்ட மலைவாழ் மக்கள் ஒவ்வொரு குடும்பம் வகையறா அடிப்படையில் 31 பெரிய பானைகளில் பொங்கல் வைத்து தஞ்சியம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நேற்று செல்லியம்மன் திருவிழா நடைபெற்றது.
மலைப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஓரிடத்தில் திரண்டு 31 பெரிய பானைகளில் பொங்கல் வைத்து அவர்களுடைய கலாச்சாரம், பாரம்பரிய முறைப்படி திருவிழாவை நடத்தினர்.
பின்னர், ஓரிடத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து அம்மன் குறி கேட்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. அம்மன் பூசாரி மேல் வந்து வந்து ‘இத்தனை நாட்கள் எனக்கு செய்தது அனைத்தும் திருப்தி.
நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என உறுதி அளித்த பின்பு சிறிதளவு பொங்கல், குங்குமத்தை மரத்தில் வைத்தால் அது அப்படியே கீழே விழாமல் நிற்கும். அவ்வாறு நின்றால் அதை ஏற்றுக் கொண்டதாக நம்புகின்றனர். அதன்படியே நேற்றும் அவர்கள் வைத்த படையலை அம்மன் ஏற்றுக்கொண்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து 31 பெரிய பானைகளில் செய்த பொங்கலை குடும்பம் குடும்பமாக அங்கேயே அமர்ந்து இரவு நேரத்தில் ஒன்றாக சாப்பிட்டு விட்டு திருவிழாவை முடித்து அவர்கள் வீடுகளுக்கு சென்றனர். இறந்தவர்களின் ஆவிகளை வீட்டிற்கு அழைத்து அவர்கள் குலதெய்வமாக வழிபடும் தஞ்சியம்மன், செல்லிம்மனை குறி கேட்டு உத்தரவு கொடுத்த பின்பு வழிபட்டு மக்கள் சுவாமி வழிபாடு செய்து வரும் வினோத நிகழ்வு ஆண்டாண்டாக தொடர்ந்து வருகிறது.
இதற்காக ஒரு மாதம் முழுவதும் அவர்கள் விரதம் கடைபிடித்து பின்பு இந்த திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்த சமயத்தில் கிராமத்தில் யாராவது உயிர் இழப்பு ஏற்பட்டாலும் அவர்கள் பழக்க வழக்க முறைப்படி அதை மாற்றி அமைத்து திருவிழாவை கொண்டாடும் வழக்கத்தையும் பின்பற்றி வருகின்றனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.