அமெரிக்க வரிவிதிப்பு விவகாரம் ஒன்றிய அரசுடன் எடப்பாடி பேசி சுமுக முடிவெடுத்திருக்கலாம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலடி
திருப்பூர்: அமெரிக்க வரிவிதிப்பு குறித்து திமுக அரசை குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டிய ஒன்றிய அரசுடன் பேசி சுமுக முடிவெடுத்திருக்கலாம் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் பிரசாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்க வரி விவகாரத்தில் திருப்பூர் தொழில்துறையினரை திமுக அரசு கைவிட்டதாக பேசியிருந்தார். இதற்கு திருப்பூரில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் அமெரிக்க வரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் இருமுறை ஒன்றிய அரசின் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தோழமைக் கட்சி தலைவர்களை அழைத்து வந்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருப்பூரில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க வரி விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டிய ஒன்றிய பாஜ அரசோடு கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பிரதமரிடம் பேசி சுமுக முடிவு எடுக்க வைத்திருக்கலாம். ஆனால் அதனை தவிர்த்து திமுக அரசை குற்றம் சாட்டி வருகிறார். திருப்பூரின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த பாலம் பணிகள், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பிறகு பாலப்பணிகள் சில முடிவுற்றும், சில நடைபெற்றும் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.