Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சம்: ரூ.17 கோடி கோல்டு கார்டு திட்டமும் அமல், இந்திய ஐடி ஊழியர்களின் அமெரிக்க கனவு தகர்ந்தது

* அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் 54,00,000 பேர், எச்1பி விசாவில் உள்ள இந்தியர்கள் 30,00,000 பேர்

* எச்1-பி விசா கட்டணம் முன்பு ஆண்டுக்கு ரூ.1,75,000., எச்1-பி விசா கட்டணம் இனி ஆண்டுக்கு ரூ.88,00,000

வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கி பணியாற்ற வழங்கப்படும் எச்-1பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.88 லட்சமாக உயர்த்தி அதிபர் டிரம்ப் அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது இந்திய ஐடி ஊழியர்களின் அமெரிக்க கனவை தகர்க்கும் நிலையில், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன்கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களின் கனவையும் பொசுக்கும் வகையில் ரூ.17 கோடிக்கான கோல்டு கார்டு திட்டத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரியில் 2வது முறையாக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ‘அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம்’ என்ற கோஷத்துடன் ஆட்சியை பிடித்த அவர், உலகளாவிய வர்த்தக யுத்தத்தை தொடங்கினார். இதில் இந்தியாவை அதிகமாக தாக்கினார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகவும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் குற்றம்சாட்டிய டிரம்ப், உலகிலேயே அதிகபட்சமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார்.

இதன் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வரி விதிப்பால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அடுத்த அணுகுண்டாக இந்திய ஐடி ஊழியர்களை குறிவைத்து அமெரிக்காவின் எச்1-பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிகரித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவில் டிரம்ப் நேற்று முன்தினம் இரவு கையெழுத்திட்டார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் முன்னிலையில் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘எச்1-பி விசா திட்டம் தற்காலிக தொழிலாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து கூடுதல், உயர் திறன் கொண்ட வேலைகளை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் குறைந்த ஊதியம் பெறும், குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களை அழைத்து வந்து அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு சுரண்டப்படுகிறது. இது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.

மேலும், நிதி மோசடி உள்ளிட்ட பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவும் எச்-1பி விசா திட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பதை புலனாய்வு அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே எச்1-பி விசாவின் துஷ்பிரயோத்திற்கு முடிவு கட்ட இந்த கட்டண உயர்வு அவசியம். இதன் மூலம் அரசுக்கு அதிகமான நிதி கிடைக்கும். அமெரிக்கர்களின் பணி பறிக்கப்படாமல் உண்மையிலேயே திறன் வாய்ந்த வெளிநாட்டவர்களை மட்டும் நிறுவனங்கள் பணியமர்த்தும்’’ என்றார்.

எச்1-பி விசா கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த எச்-1பி விசாவில் 71% இந்தியர்கள் பெற்றுள்ளனர். இதுவரை எச்-1பி விசா கட்டணம் ஆண்டுக்கு ரூ.1.75 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் அளவுக்கு இருந்தது. ஆனால் டிரம்பின் புதிய உத்தரவால் இனி இந்திய தொழிலாளர்களை அமெரிக்காவில் வேலைக்கு அமர்ந்த சம்மந்தப்பட நிறுவனங்கள் ரூ.88 லட்சத்தை அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டும்.

இவ்வளவு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டுமென்பதால் இனி இந்திய ஐடி இன்ஜினியர்களை அமெரிக்காவில் பணியமர்ந்த அங்குள்ள நிறுவனங்கள் யோசிக்கும். மேலும், ஏற்கனவே விசா வழங்கப்பட்டவர்களின் விசா காலத்ததை நீட்டிக்கவும் நிறுவனங்கள் யோசனை செய்யும். இது அமெரிக்காவில் உள்ள பல இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளும். இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் மற்றும் அமெரிக்க கனவோடு இருக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல, கோல்டு கார்டு எனும் தங்க அட்டை விசா திட்டத்திற்கான உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கோல்டு கார்டு பெற தனிநபர்கள் ஆண்டுக்கு ரூ.8.8 கோடியும், தொழில்நிறுவனங்கள் ரூ.17.6 கோடியும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த விசா மூலம் அமெரிக்காவின் எந்த மாகாணத்திற்கும் செல்லலாம். ஆண்டுக்கு 270 நாட்கள் வரையிலும் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம்.

இது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘கோல்டு விசா திட்டம் மூலம் விரைவாக 100 பில்லியன் டாலர் (ரூ.9 லட்சம் கோடி) நிதியை திரட்ட முடியும். அமெரிக்காவுக்கு அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய நிறுவனங்கள் வர வேண்டுமென்பதே இந்த திட்டத்தின் நோக்கம்’’ என்றார். கோல்டு விசா பெறுபவர்களுக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு வழங்கப்படும்.

ஏற்கனவே இந்தியர்கள் பலரும் கிரீன்கார்டு விண்ணப்பித்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் கோல்டு கார்டு திட்டம் அவர்களின் கனவை கலைக்கும் விதமாக உள்ளது. தற்போது கிரீன்கார்டு பெற இந்தியர்கள் சாதாரணமாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. அப்படி இருப்பவர்கள் கிரீன் கார்டு கிடைக்கும் வரை இனி ஆண்டுக்கு ஆண்டு ரூ.88 லட்சம் செலுத்துவது என்பது மிகப்பெரிய நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

டிரம்பின் இந்த உத்தரவுகள் இந்தியர்களை வெகுவாக பாதிக்கும் என கூறப்பட்டாலும், மறுபுறம் அமெரிக்கா ஐடி துறைக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனிப்பட்ட ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்ற ஊழியர்களான எச்-1பி சிறப்பு பிரிவினருக்கு மட்டும் இந்த கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* கட்டண உயர்வுக்கு முன்னும் பின்னும் எச்-1பி விசாவுக்கு தற்போது செலுத்தப்படும் கட்டண விவரங்கள்:

அடிப்படை கட்டணம்: ரூ.40,000 (460 டாலர்)

பதிவு கட்டணம்: ரூ.800 (10 டாலர்)

மோசடி தடுப்பு கட்டணம்: ரூ.44,000 (500 டாலர்)

பயிற்சி கட்டணம்: ரூ.66,000 ரூ.1.32 லட்சம் (750-1500 டாலர்)

இதுதவிர, சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் எச்-1பி விசா பெற்றவர்களாக இருந்தால் பொது சட்ட கட்டணம்: ரூ.3.5 லட்சம் (4,000 டாலர்), விரைவாக விசா வழங்க பிரீமியம் கட்டணம்: ரூ.2.2 லட்சம் (2,500 டாலர்) வசூலிக்கப்படும்.

* இன்று முதல் கட்டண உயர்வுக்கு பின்,

புதிய எச்-1பி விசா கட்டணம்: ரூ.88 லட்சம் (1 லட்சம் டாலர்)

புதுப்பிப்பு கட்டணம்: எச்-1பி விசா 3 ஆண்டுக்கு தரப்படும். அடுத்த 3 ஆண்டுக்கு விண்ணப்பிக்கும் கட்டணம் சேர்த்து ரூ.1.76 கோடி செலுத்த வேண்டியிருக்கும்.

கிரீன் கார்டு பெற 10 முதல் 15 ஆண்டு ஆகலாம். எனவே கிரீன் கார்டு பெற முயற்சிப்பவர்கள் எச்-1பி விசாவுக்காக ரூ.5 கோடி வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதனால் பெரிய நிறுவனங்கள் பிஎச்டி படித்த உயர் திறன்மிக்க ஊழியர்களை மட்டுமே தக்க வைக்க முடிவு எடுக்கலாம்.

* அமெரிக்கர்கள் வேலை இழந்தது எப்படி?

‘குடியுரிமை பெறாத தொழிலாளர்களின் நுழைவு கட்டுப்பாடு’ என்ற தீர்மானத்தில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2000 மற்றும் 2019க்கு இடையில் அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேலாக, அதாவது 12 லட்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 25 லட்சமாக அதிகரித்துள்ளது.

அதே சமயம், மேற்கண்ட துறைகளில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு 44.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. கணினி மற்றும் கணிதத் தொழில்களில், பணியாளர்களின் வெளிநாட்டுப் பங்கு 2000 ஆம் ஆண்டில் 17.7 சதவீதத்திலிருந்து 2019 இல் 26.1 சதவீதமாக வளர்ந்தது. வெளிநாட்டு தொழிலாளர்களின் இந்த வருகைக்கு முக்கிய காரணம் எச்1-பி விசாவில் செய்யப்பட்ட துஷ்பிரயோகம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எச்-1பி விசா அமைப்பை அதிகளவில் தவறாக பயன்படுத்தி அமெரிக்க தொழிலாளர்களுக்கு கணிசமாக தீங்கு விளைவித்துள்ளன. எச்-1பி திட்டத்தில் ஐடி தொழிலாளர்களின் பங்கு 2003 நிதியாண்டில் 32 சதவீதத்திலிருந்து கடந்த 5 நிதியாண்டுகளில் சராசரியாக 65 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்தது. மிகவும் வளமான எச்-1பி முதலாளிகளில் சிலர் இப்போதும் தொடர்ந்து அவுட்சோர்சிங் நிறுவனங்களாக உள்ளனர்.

எச்-1பி விசா மூலம் பாரம்பரிய, அமெரிக்க ஊழியர்களுக்கு பதிலாக தொடக்க நிலை வெளிநாட்டு ஊழியர்களை பயன்படுத்தி, நிறுவன முதலாளிகள் பெரும் லாபம் பார்க்கின்றனர். இங்குள்ள நிறுவனங்கள் தங்கள் ஐடி பிரிவுகளை மூடுகின்றன, அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன, குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஐடி வேலைகளை அவுட்சோர்ஸ் செய்கின்றன.

2025ம் நிதியாண்டில் ஒரு மென்பொருள் நிறுவனம் 5,000க்கும் மேற்பட்ட எச்-1பி தொழிலாளர்களுக்கு ஒப்புதல் அளித்தது; அதே நேரத்தில், அது 15,000 க்கும் மேற்பட்ட உள்நாட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மற்றொரு ஐடி நிறுவனம் கிட்டத்தட்ட 1,700 எச்-1பி தொழிலாளர்களுக்கு ஒப்புதல் அளித்தது. ஜூலை மாதம் ஓரிகானில் 2,400 அமெரிக்க தொழிலாளர்களை அது பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

மூன்றாவது நிறுவனம் 2022 முதல் சுமார் 27,000 அமெரிக்க தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதே நேரத்தில் 25,000 க்கும் மேற்பட்ட எச்-1பி தொழிலாளர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோல அமெரிக்கர்கள் எச்-1பி விசாவில் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 21, 2025 அன்று இந்த தீர்மானம் அமலுக்கு வந்த 12 மாதங்களுக்குப் பிறகு, நீட்டிப்பு இல்லாத நிலையில் காலாவதியாகும்.

* டிரம்ப் அறிவிப்பு பொறுப்பற்றது

அதிபர் டிரம்பின் கட்டண உயர்வு அறிவிப்புக்கு அமெரிக்க எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்திய வம்சாவளி எம்பியான ராஜா கிருஷ்ணமூர்த்தி, ‘‘ உயர் திறமையான தொழிலாளர்களிடமிருந்து அமெரிக்காவை துண்டிக்கும் டிரம்பின் உத்தரவு பொறுப்பற்ற முயற்சி ’’ என்றார்.

முன்னாள் அதிபர் பைடனின் முன்னாள் ஆலோசகரும், குடியேற்றக் கொள்கையில் ஆசிய-அமெரிக்க சமூகத் தலைவருமான அஜய் பூடோரியா கூறுகையில், ‘‘டிரம்பின் முடிவால் அமெரிக்க தொழில்நுட்பத் துறையின் போட்டித்தன்மைக்கு பெரும் நெருக்கடி ஏற்படக்கூடும். இது பல்வேறு திறமைகளை நம்பியிருக்கும் சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை நசுக்கும்’’ என்றார்.

* பலவீனமான பிரதமர்: ராகுல் தாக்கு

எச்-1பி விசா விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார்’’ என கூறி உள்ளார்.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘டிரம்ப் அரசாங்கத்திடமிருந்து பிரதமர் மோடி பெற்ற பிறந்தநாள் பரிசுகளால் இந்தியர்கள் வேதனையடைந்துள்ளனர்.

அவை, இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் வகையில் எச்-1பி விசாக்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ.88 லட்சம் ஆக உயர்த்தப்பட்டது . ஏற்கனவே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதனால் 10 துறைகளில் மட்டும் இந்தியாவிற்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டி அணைப்பது, வெற்று முழக்கங்கள் இடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் மக்களை “மோடி, மோடி” என்று கோஷமிட வைப்பது என்பது வெளியுறவுக் கொள்கை அல்ல ’’ என விமர்சித்துள்ளார்.

* அதிகமான எச்1-பி விசா வழங்கும் நிறுவனங்கள்

வழக்கமாக எச்1-பி விசா ஆண்டுக்கு 65,000 பேருக்கும், முதுகலை பட்டம் பெற்ற நிபுணர்களுக்கு 20,000 எச்1பி விசாவும் வழங்கப்படும். அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறையின் புள்ளிவிவரங்கள்படி, 2025ல் எச்1-பி விசா மூலம் வெளிநாட்டவர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பை வழங்கும் டாப்-10 நிறுவனங்கள்:

* இந்தியாவை தலைமையிடமாக கொண்ட நிறுவனங்களில் அதிகமான எச்1-பி விசா வழங்குவது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம். இதுதவிர, இன்போசிஸ் (2,004), விப்ரோ (1,523) மற்றும் டெக் மஹிந்திரா (951) ஆகிய நிறுவனங்களும் எச்1-பி விசாவை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

* ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் அவசர பயணம்

எச்-1பி விசா கட்டண உயர்வை தொடர்ந்து, ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் அவசரமாக நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த பயணத்தில் வர்த்தக பேச்சுவார்த்தையுடன், விசா தொடர்பாகவும் இந்தியாவின் கவலைகள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசா கட்டண உயர்வால் இந்தியர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அமெரிக்க அதிகாரிகளால் நிவர்த்தி செய்ய முடியும் என வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* கோல்டு கார்டு ஏன்?

கோல்டு கார்டு குறித்து வர்த்தக அமைச்சர் லுட்னிக் கூறுகையில், ‘‘வேலைவாய்ப்பு அடிப்படையில் ஆண்டுக்கு 2 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு கிரீன்கார்டு வழங்கப்படுகிறது. இவ்வாறு நிரந்தர குடியுரிமை பெறுபவர்களின் சராசரி வருமானம் 66,000 டாலராக இருக்கிறது. ஆனால், நிரந்தர குடியுரிமை பெற்ற பின்னர் அவர்கள் அனுபவிக்கும் அரசு சலுகைகள் அதை விட 5 மடங்கு அதிகம்.

அமெரிக்கர்களை விட வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் அதிக பலன் அடைகின்றனர். இதை நாங்கள் நிறுத்தப் போகிறோம். அமெரிக்கர்களிடமிருந்து வேலைகளைப் பறிக்க முயற்சிப்பவர்களுக்குப் பதிலாக, மிக உயர்ந்த நிலையில் உள்ள அசாதாரண மக்களை மட்டுமே நாங்கள் எடுப்போம். அவர்கள் வணிகங்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு வேலைகளை உருவாக்கப் போகிறார்கள்’’ என்றார்.

* எச்-1பி விசா என்றால் என்ன?

அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் அங்கு தங்கி வேலை செய்வதற்காக எச்1-பி விசா வழங்கப்படுகிறது. கடந்த 1990ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விசா மூலம் அதிகம் பயனடைவது இந்திய ஐடி ஊழியர்கள்தான். ஓராண்டிற்கு 65,000 எச்1-பி விசாக்களை அமெரிக்க அரசு வழங்கும். இதில், 71 சதவீதத்தை பெறுவது இந்தியர்கள்தான். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனர்கள் 11 சதவீத எச்1-பி விசாவை பெறுகின்றனர். இந்த விசா முதலில் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

பின்னர் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். நிரந்தரமாக தங்கியிருக்க கிரீன்கார்டு பெற வேண்டும். அதுவரை எச்1-பி விசாவை நீட்டிக்க வேண்டும். ஓராண்டுக்கு 2 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. சுமார் 2.5 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர். இனி அவர்கள் தங்கள் விசாவை புதுப்பிக்க ஆண்டுக்கு ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்பது மிகப்பெரிய இடியாக அமைந்திருக்கிறது.

* கவனம் பெறும் கனடா

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற முடியாத இந்திய ஐடி துறையினரின் கவனம் இனி விசா நடைமுறைகள் எளிதாக உள்ள கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தீபாவளிக்கான பயணத்தை ரத்து செய்த ஐடி ஊழியர்கள்

அதிபர் டிரம்பால் அமெரிக்காவில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். தீபாவளி, திருமண விசேஷங்களுக்காக இந்தியா வருவதற்காக எடுத்து வைத்துள்ள டிக்கெட்களை பலரும் ரத்து செய்துள்ளனர். இப்போதைக்கு அமெரிக்காவை விட்டு வெளியேறுவதை அனைவரும் தவிர்த்துள்ளனர்.

மேலும், ஐடி ஊழியர்களை நம்பி அவர்களுடன் உள்ள குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையே இப்பிரச்னை தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தீர்வு காண ஐடி தொழில்துறை தீவிர முயற்சிகள் எடுத்து வருவதாகவும் ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

* செப். 21க்குள் அமெரிக்கா திரும்ப அதிரடி உத்தரவு

டிரம்ப் கட்டண உயர்வு உத்தரவில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, எச்1-பி விசா வைத்திருப்பவர்கள் அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் விடுமுறைக்காக அமெரிக்காவுக்கு வெளியே சென்றிருந்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள், அதாவது செப்டம்பர் 21 நள்ளிரவு 12.01 மணிக்குள் அமெரிக்காவுக்கு திரும்ப மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. அதற்குள் வராதவர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது எச்1பி விசாவில் சொந்த நாட்டிற்கு வந்தவர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.