நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த கால்இறுதி போட்டியில் 4ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் 31 வயதான ஜெசிகா பெகுலா, 29 வயதான செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் மோதினார். இதில் ஜெசிகா பெகுலா 6-3,6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவுடன் மோத இருந்தார்.
ஆனால் முழங்கால் காயம் காரணமாக மார்கெட்டா கடைசிநேரத்தில் விலகினார். இதனால் சபலென்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு கால்இறுதியில் 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 6-4,6-4,6-4 என்ற செட் கணக்கில், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் 7ம் நிலை வீரரான 38 வயதான செர்பியாவின் ஜோகோவிச், 4ம் நிலை வீரரான அமெரிக்காவின் 27 வயதான டெய்லர் ஃபிரிட்ஸ் மோதினர். இதில் 6-3,7-5,3-6,6-4 என ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.