திமுகவுக்கு எதிராக சிபிஐ, ஈடி, ஐடி, தேர்தல் ஆணையம் என அனைத்தையும் பயன்படுத்துவார்கள்: நமது பலத்தை துல்லியமாக பயன்படுத்தி எதிர்கொள்வோம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளோம். பல்வேறு சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. சிபிஐ, ஈடி, ஐடி, தேர்தல் ஆணையம்-இவையனைத்தையும் அவர்கள் நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள். இவற்றை எதிர்கொள்ள, நமது பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் “என் வாக்குச் சாவடி-வெற்றி வாக்குச் சாவடி” என்ற தலைப்பில் நேற்று நடந்தது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உயரிய நோக்குடன், பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றை துறந்து எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள். நாம் இவ்வளவு கடினப்பட்டு இருந்தாலும் பாதி கிணறு தான் கடந்துள்ளோம். வெரிபிகேஷன் பணிகள் நிறைவடைந்து, நமது மக்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் பட்டியல் வந்தால் தான் முழு கிணற்றையும் கடந்ததாக கருத முடியும். எஸ்.ஐ.ஆர். பணிகள் வாக்குரிமையை பாதுகாக்கும் அடிப்படைப் பணியாக இருந்தால், “என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி” என்பது நமது வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பணியாகும்.
எனவே, நாம் அனைவரும் களத்தில் மிகுந்த தீவிரத்துடன் பணியாற்ற வேண்டும். உங்கள் ஆற்றலுக்கும் உழைப்புக்கும் முன் எவராலும் நிற்க முடியாது. எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான். உங்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இதை கூறவில்லை. இது தான் உண்மை. நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 86 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். இதில் பயனாளிகளுடன் சேர்த்து, திமுகவினரையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முந்தைய ஆட்சிக்காலங்களில் மழை பெய்தாலே உதவிக்காக காத்திருந்த நிலையும், நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் முறையும் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை மக்களுக்கு களத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். நமது சிறப்பான பணிகளைப் பார்த்து நடுநிலை வாக்காளர்களும் இன்று நமக்கு ஆதரவாக நிற்கின்றனர். மொத்தமாக, பயனாளிகள்-திமுகவினர்-நடுநிலை வாக்காளர்கள் என சேர்த்தால், இரண்டு கோடியே ஐம்பது லட்சம் வாக்குகளை தாண்டுவது சாத்தியமே.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கூட்டணி பெற்ற வாக்குகள் 2 கோடியே 9 லட்சம் வாக்குகள் தான். இந்த முறை, அதைவிட கூடுதலாக அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி. இந்த புள்ளி விவரங்களை முன்வைத்து, உங்கள் களப்பணியின் மீது உள்ள நம்பிக்கையோடு தெளிவாகக் கூறுகிறேன்- நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளோம். இத்தனை சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. சிபிஐ, ஈடி, ஐடி, தேர்தல் ஆணையம்-இவையனைத்தையும் அவர்கள் நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள்.
தினந்தோறும் ஏராளமான பொய்கள் பரப்புவார்கள், போலியான பிம்பங்களை உருவாக்குவார்கள், ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்ச் செய்திகளை பரப்புவார்கள். இவற்றை எதிர்கொள்ள, நமது பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். கொள்கை தான் நமது பலம். நிர்வாகிகள் தான் நமது பலம். தீயாக உழைக்கும் திமுக உடன்பிறப்புகள் தான் நமது பலம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள கட்சி கட்டமைப்பு தான் நமது பலம். இந்த பலங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்துவதே நமது முக்கியமான வியூகம் ஆக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது வாக்குகளை உறுதி செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது திமுகவினர் உற்சாகத்துடன் செயல்பட வைக்க வேண்டும். அதற்காகத்தான், “என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி” என்ற இந்த பரப்புரை. அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட மாநில நிர்வாகி முதல், வார்டு மற்றும் கிளைச் செயலாளர்கள் வரை அனைவரையும் கூட்டங்களில் பங்கேற்க அழைக்க வேண்டும். அந்த வாக்குச்சாவடியில் மூத்த திமுக முன்னோடிகள் அல்லது ஏதேனும் அதிருப்தியாளர்கள் இருந்தால், அவர்களையும் தவறவிடாமல் அழைக்க வேண்டும்.
தேனாம்பேட்டையில், என் வாக்குச்சாவடியில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நானும் நேரடியாகப் பங்கேற்பேன். வீடு வீடாகச் செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினரும் வீடு வீடாகச் செல்லுவதை உறுதி செய்யுங்கள். வீடுவீடாக சென்று விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முறையாக சரிபார்க்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். நான் இரவிலும் உறங்காமல் உழைத்து வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும். அதே அளவிலான உழைப்பை, உங்களின் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன். ஒரு வாக்குச்சாவடியை வென்றால், ஒரு தொகுதியை வெல்லலாம்.
எனவே, இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியும் மிக முக்கியமானது. உங்கள் வாக்குச்சாவடியில் வெற்றி பெற வேண்டிய பொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களது வாக்குச்சாவடிகளில் வென்று வருவீர்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இந்த பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன். என் நம்பிக்கையை காப்பாற்றுங்கள். மீண்டும் வெல்வோம். வரலாறு படைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
* மக்களாட்சியைக் காப்பாற்றுவோம்
திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க எஸ்ஐஆர் பணிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு உதவிய திமுகவினரை பாராட்டுகிறேன். தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் வரையிலும் நமது பணி முழுமையடையாது. தொடர்ந்து மக்களைச் சந்தித்து, நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளைச் சொல்லி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என அவர்களது துணையுடன் மக்களாட்சியைக் காப்பாற்றுவோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்.


