Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கற்பித்தலில் புதிய யுத்திகளைப் பயன்படுத்துங்கள்!

பொதுவாக பள்ளிப்பருவத்தில் பெரும்பாலான மாணவர்களிடம் விளையாட்டு குணமே அதிகமாக இருக்கும். கல்வியின் அவசித்தையும், எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிகழ்காலச் செயல் திட்டம் என்பதையும் பள்ளிப்பருவத்தில் உணர்வதற்கு வாய்ப்பில்லை. அதனால் ஆசிரியர்கள்தான் தங்கள் கற்பித்தல் திறனைக் கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். கற்றலில் மாணவர்களைத் திறம்பட ஈடுபடுத்துவதற்கும் வகுப்பறையில் நேர்மறையான சூழலை உருவாக்குவதற்கும் கற்பித்தல் திறன் மிகவும் அவசியமாகும். இந்தத் திறன் அன்றாடப் பணிகளை நிர்வகிப்பது மட்டுமல்ல மாணவர்கள் தங்கள் தனித் திறனை உணர்ந்து கற்கக்கூடிய சூழலை வளர்ப்பதற்கான அடித்தளம் ஆகும்.

ஆசிரியர்கள் பாடத் தலைப்பில் புலமை, பாட தொடர்புடைய கருத்துகள் மற்றும் அது தொடர்பான சமீபத்திய செய்திகளை அறிந்திருத்தல் அவசியம். வகுப்பறைச் சூழ்நிலை, மாணவர்கள் மனநிலை இவையெல்லாம் ஆசிரியரின் திறமையை நிர்ணயிப்பவை என்றாலும், ஆசிரியரின் ஆளுமைத்திறன்தான் பிரதானமானதாகும். மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தலில் சற்று வித்தியாசமான அணுகுமுறையும், புதுமைகளை புகுத்துதலும், மாறுப்பட்ட புதிய யுத்திகளை பயன்படுத்துதலும் நல்ல பலனைத் தரும்.

உதாரணமாக, ஒரு சிலர் வகுப்பறையில் பாடங்களை கற்பிக்கத் தொடங்கும் முன்பாக மாணவர்கள் மனநிலையை ஒருநிலைப்படுத்த ஒரு நிமிடத் தியானம் செய்யச் சொல்வதுண்டு. பாடக் கருத்துகளை தொடர்புடைய நகைச்சுவைத் துணுக்குகளோடு இணைத்து கற்பித்தல் நல்ல பயனைத் தரும். மாணவர்கள் பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ள உதவும். அதேபோல அன்றாட வாழ்வில் நிகழும் சில சம்பவங்களை உதாரணமாகக் கூறி பாடங்களை போதிப்பதும் பாடத்திட்டங்களை எளிதில் மறவாமல் நினைவில் நிற்கச்செய்யும். பாடம் எடுக்கும்போது மாணவர்களை கட்டாயம் குறிப்பு எடுக்க வைப்பது இரட்டிப்பு பலனைத் தரும். இதன் மூலம் கவனச் சிதறல் இருக்காது. பாடச் செய்திகளை குறிப்பெடுக்கும்போது பாடத் தலைப்பை ஒரு முறை படிக்கும் நிலை ஏற்படுவதோடு சந்தேகங்கள் உடனுக்குடன் களைய வாய்ப்பை ஏற்படுத்தும்.

பொதுவாக ஆசிரியர்கள் ஒரே இடத்தில் இருந்துகொண்டு பாடம் எடுக்காமல் வகுப்பறை முழுவம் கடைசி வரைச் சென்று அவ்வப்போது கண்காணிப்பது பின் இருக்கை மாணவர்களையும் பாடங்களில் கவனம் செலுத்த வைக்கும். மாணவர்களைக் கரும்பலகையில் பாடத் தலைப்பின் கருத்துச் சுருக்கம் எழுதச் செய்தல் போன்றவை நல்ல பலனைத் தரும். பாடத் தலைப்பை ஒட்டிய ஒரு சில மாணவர்களின் சந்தேகத்தை பாடத்தை நன்கு அறிந்த மாணவர்களைக் கொண்டு விளக்க முயற்சிப்பது பயன் தரும். தேவையானால் இடைஇடையே ஆசிரியர் திருத்தங்கள் செய்தல், கூடுதல் விவரங்கள் தருதல், பதில்களை நெறிபடுத்துதல் நல்ல பலன் கொடுக்கும். மாணவர்கள் பல்வேறு கற்றல் பாணிகள் மற்றும் வேகங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நீங்கள் வேறுபட்ட திறன்களை அந்தந்த மாணவர்களுக்கு ஏற்ப மாற்ற வேண்டியது மிகமிக அவசியம். ஆசிரியர்களில் பலருக்கு, மாணவர்களுடன் தொடர்புகொள்ளும் திறன் போன்ற சில கற்பித்தல் திறன்கள் இயல்பாகவே வரலாம். ஒருசிலருக்கு அத்தகைய திறன்களைப் பெறுவதற்குப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படலாம். இன்றைய சமூகத்தின் டிஜிட்டல் தன்மை காரணமாக கல்வி அமைப்புகளில் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு முக்கியமானது. ஒரு ஆசிரியராக, நீங்கள் சமீபத்திய கல்வி தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் பயன்பாட்டில் உங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பம் இப்போது கற்றலில் எவ்வாறு ஊடுருவியுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பாடம் திட்டமிடல், பணி வழங்குதல் மற்றும் தரப்படுத்தல் முதல் மாணவர்களின் செயல்திறன் மற்றும் நடத்தையைப் பகுப்பாய்வு செய்வது வரை, வகுப்பறையில் தொழில்நுட்பம் இன்றியமையாததாகிவிட்டது. எனவே, கல்வித் தொழில்நுட்பத்தில் உங்கள் திறமைகளை மேம்படுத்தும்போது, ​​ஆசிரியராக உங்கள் திறனை அதிகரிக்கிறீர்கள். இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறனில் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும். மேலும், உங்கள் தொழில்நுட்ப திறன்களை செம்மைப்படுத்துவது உங்கள் கற்பித்தல் சுயவிவரத்திற்குக் குறிப்பிடத்தக்க மதிப்பை சேர்க்கிறது. நவீன வகுப்பறைகளுக்கான உங்கள் தயார்நிலையை நிரூபிக்கிறது. இதன் விளைவாக அனைத்து மாணவர்களின் கற்றல் திறனும் மெருகேறும் சூழலை நீங்கள் வளர்க்க முடியும்.

- முத்து