வாஷிங்டன்: அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா மீது மெக்சிகோவும் 50 சதவீத வரி விதிக்கிறது. இந்தியா மீது அமெரிக்கா தற்போது 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த நிலையில் இந்தியா மீது மெக்சிகோவும் 50 சதவீத வரியை விதித்துள்ளது. வர்த்தக ஒப்பந்தம் இல்லாத இந்தியா, தென் கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகள் மீது இந்த வரிவிதிப்பை மெக்சிகோ அமல்படுத்தி உள்ளது. தேசியத் தொழில் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக விதிக்கப்படும் இந்த வரிகள் 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ உதிரிபாகங்கள், இலகு ரக கார்கள், ஆடை, பிளாஸ்டிக், எஃகு, வீட்டு உபயோகப் பொருட்கள், பொம்மைகள், ஜவுளி, தளபாடங்கள், காலணிகள், தோல் பொருட்கள், காகிதம், அட்டைப் பெட்டிகள், மோட்டார் சைக்கிள்கள், அலுமினியம், டிரெய்லர்கள், கண்ணாடி, சோப்புகள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்பட 1463 பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து மெக்சிகோவுக்கு போக்ஸ்வேகன், ஹூண்டாய், நிசான் மற்றும் மாருதி சுசுகி போன்ற கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புதிய வரிவிதிப்பால் தற்போதுள்ள 20 சதவீத வரி இனிமேல் 50 சதவீதமாக அதிகாரிக்கும். இதனால் ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்படும். ஏனெனில் தென்னாப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியாவிற்குப் பிறகு மெக்சிகோ இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் ஏற்றுமதி சந்தையாகும். 2023 ஆம் ஆண்டில் இந்தியா மெக்சிகோவின் 9வது பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது. இந்தியத் தரப்பிலிருந்து வர்த்தகப் பட்டியலில், ஏற்றுமதி செய்யப்படும் மிக முக்கியமான பொருட்கள் ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், மருந்துப் பொருட்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் பொருட்கள் ஆகும்.


