Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் எச்-1பி விசாவுக்கு பதிலடி; இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை குறிவைக்கும் சீனா: ‘கே விசா’ என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகம்

பீஜிங்: அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டுப்பாடுகளுக்குப் போட்டியாக, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கவரும் நோக்கில் சீனா ‘கே விசா’ திட்டத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் 1,00,000 டாலராக அதிரடியாக உயர்த்தினார். இந்த அறிவிப்பால், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்ல விரும்பும் திறமையான இளைஞர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், உலகளாவிய திறமையாளர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் வகையிலும் சீனா புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘கே விசா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு சீன அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இது வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியுடைய இளம் தொழில்நுட்ப நிபுணர்களைக் கவரும் வகையில் இந்த ‘கே விசா’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எச்-1பி விசா போலல்லாமல், இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் அழைப்புக் கடிதமோ அல்லது வேலைவாய்ப்போ தேவையில்லை என்பது முக்கிய அம்சமாகும். மேலும், இந்த விசாவைப் பெறுபவர்கள் வேலை செய்வது மட்டுமின்றி, கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள், அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் தொழில் முனைவு நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.

எளிமையான விண்ணப்ப செயல்முறையைக் கொண்ட இந்தத் திட்டம், அமெரிக்கா செல்ல நினைக்கும் இந்திய நிபுணர்களுக்கு மாற்று வழியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய திறமையாளர் போட்டியில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டுப்பாடுகளுக்குப் போட்டியாக, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கவரும் நோக்கில் சீனா ‘கே விசா’ திட்டத்தை அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.