வாஷிங்டன் : கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்காக கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமை இந்திய அமெரிக்க மற்றும் இந்து சமூகங்கள் பாராட்டியுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி அன்று அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் சட்டமன்ற மசோதா (AB) 268ஐ சட்டமாக கையெழுத்திட்டார். இந்தச் சட்டத்தின் கீழ், தீபாவளி அதிகாரப்பூர்வ பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா அரசு ஊழியர்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இப்போது விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்காவின் பென்சில்வேனியா, கனெக்டிகட் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்தது. இந்த அறிவிப்பு கலிபோர்னியாவில் வசிக்கும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 1 மில்லியன் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தீபாவளியை கலிபோர்னியா மாநில விடுமுறையாக மாற்றியதற்காக ஆளுநர் கவின் நியூசமுக்கு நன்றி. இந்த மசோதாவை அவைக்கு கொண்டு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஷ் கல்ரா மற்றும் தர்ஷன் படேலுக்கும் நன்றி. இது ஒளி, ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் கொண்டாட்டம்" என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகரான அஜய் பூடோரியா பாராட்டியுள்ளார்.