Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விதிகளில் அதிரடி மாற்றம் செய்து உத்தரவு; அமெரிக்காவில் ஓராண்டில் 85,000 விசாக்கள் ரத்து: மாணவர் விசாவும் பறிபோனதால் அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி முதல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அமைந்தது முதல், நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பயங்கரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கிலும், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் விசா நடைமுறைகளில் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விசா காலாவதியாவது, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பது மற்றும் தீவிரமான விதிமீறல்களில் ஈடுபடுவது போன்ற காரணங்களுக்காகக் கடந்த காலங்களில் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு வந்தன. விசா பெற்றவர்களின் பின்னணி மற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், தற்போது கண்காணிப்பு வளையம் மேலும் இறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 2025 முதல் தற்போது வரை சுமார் 85 ஆயிரம் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களும் அடங்கும் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், திருட்டு மற்றும் தாக்குதல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதே பாதிக்கும் மேற்பட்ட விசா ரத்துக்கு முக்கியக் காரணமாகும்’ என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் தங்கியுள்ள 5.5 கோடி வெளிநாட்டினரைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலான புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வரும் 15ம் தேதி முதல் எச்-1பி விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் சமூக வலைதளக் கணக்குகளை அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் பொதுவெளியில் வைத்திருக்க வேண்டும் எனவும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.