Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தல்; வெனிசுலா மீது போர் தொடுப்போம்: சீனாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தப்படுவதற்கு சீனாவே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அதிபர் டிரம்ப், இதுதொடர்பாக சீன அதிபரிடம் நேரில் கேள்வி எழுப்ப உள்ளதாக ஆவேசமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் ‘பென்டனைல்’ என்ற கொடிய போதைப்பொருளின் பயன்பாட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போதைப்பொருள் சீனாவிலிருந்து கடத்தி வரப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இதற்கு பதிலடியாக அமெரிக்கா, சீனப் பொருட்கள் மீது கடுமையான சுங்க வரிகளை விதித்து வருகிறது. கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஜப்பானில் நடந்த ஜி20 மாநாட்டின்போது டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரில் சந்தித்துப் பேசிய நிலையில், தற்போது மீண்டும் தென் கொரியாவின் பூசான் நகரில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சி மாநாட்டில் இருவரும் சந்திக்க உள்ளனர். இந்த சூழ்நிலையில், வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், ‘சீன அதிபரை சந்திக்க உள்ளேன். அவரிடம் நான் கேட்கப்போகும் முதல் கேள்வியே பென்டனைல் போதைப்பொருள் குறித்துதான். எங்களது நாட்டுக்குள் பென்டனைலை விற்பதன் மூலம் அவர்கள் 100 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் எங்களது 20 சதவீத சுங்க வரியால் அவர்கள் 100 பில்லியன் டாலரை இழக்கிறார்கள். தற்போது அமெரிக்க மற்றும் மெக்சிகோ துறைமுகங்களில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக, வெனிசுலா நாட்டை இடைத்தளமாகப் பயன்படுத்தி சீனா, அமெரிக்காவுக்குள் பென்டனைலை கடத்துகிறது. இது தொடர்பாக வெனிசுலாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தரைவழி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். போர் பிரகடனத்தை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கொண்டு வருபவர்களை கொல்லப் போகிறோம்’ என்று ஆவேசமாக கூறினார்.