வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரபல அரசியல் பிரமுகரும், டர்னிங் பாயிண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், டிரம்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31), உட்டா வேலி பல்கலைக்கழகத்தில் நடந்த கேள்வி- பதில் நிகழ்ச்சியில் பதிலளித்து கொண்டிருந்தார். அவர், துப்பாக்கி சூடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அடுத்த நொடியே அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து உயிரிழந்தார். இதை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான பகீர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது மரணத்திற்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து அமெரிக்க கொடிகளையும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்கா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து எப்பிஐ விசாரணை நடத்தி சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்துள்ளது. அவர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அடங்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
* யார் இந்த சார்லி கிர்க்?
31 வயதான சார்லி கிர்க் அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர். இவர் பழமைவாத சிந்தனையாளர். அமெரிக்காவின் முக்கிய வலதுசாரி அரசியல் பிரமுகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். எழுத்தாளர், பேச்சாளர், வர்ணனையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். சில காலம் தேசிய கொள்கைக்கான கவுன்சிலிங் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். சார்லிக்கும், அதிபர் டிரம்ப்புக்கும் இடையே நீண்ட நட்பு உள்ளது. 2016 முதல் இந்த நட்பு மிகவும் வலுவானது. ஒரு முறை சார்லியை டிரம்ப் ‘ஒளியின் போராளி’ என்று புகழ்ந்தார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ‘மீண்டும் அமெரிக்காவை வலிமையானதாக மாற்றுவோம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க டிரம்ப்புக்கு தூண்டுகோலாக இருந்தார் சார்லி. சர்வசாதாரணமாக வெள்ளை மாளிகைக்குச் சென்று டிரம்ப்பை சந்திக்கக் கூடியவர்.