Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்வோம் விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை: அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இந்திய பொருட்களுக்கான வரியை அதிபர் டிரம்ப் 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார். முதலில் விதிக்கப்பட்ட 25 சதவீத வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவின் விவசாயம் மற்றும் பால் சந்தைக்கு அதிக அணுகல் தேவை என்ற அமெரிக்காவின் கோரிக்கையில் வர்த்தக ஒப்பந்தம் சிக்கிக் கொண்டுள்ளது.

சோளம், சோயாபீன்ஸ், ஆப்பிள், பாதாம் மற்றும் எத்தனால் போன்ற பொருட்களுக்கான வரிகளை குறைக்கவும், அமெரிக்க பால் பொருட்களுக்கான அணுகலை அதிகரிக்கவும் அமெரிக்கா விரும்புகின்றது. எனினும் இந்த கோரிக்கைகள் இந்தியாவை நேரடியாக பாதிக்கும் என்பதால் ஒன்றிய அரசு இந்த கோரிக்கைகளை எதிர்க்கிறது. இந்நிலையில், அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் இந்தியாவின் பசுமைப்புரட்சியின் சிற்பியான மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த உலகளாவிய மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, ‘‘எங்களை பொறுத்தவரை விவசாயிகளின் நலன்களுக்கு தான் முன்னுரிமை. இந்தியா அதன் விவசாயிகள், பால் பண்ணையாளர்கள் மற்றும் மீனவர்களின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது.

விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக தனிப்பட்ட முறையில் அதிக விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு விலையை இந்தியா இன்று (நேற்று)செலுத்த தயாராக உள்ளது.

ஊட்டச்சத்து பாதுகாப்பு, பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் காலநிலைக்கு ஏற்ற பயிர் வகைகளின் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை உறுதி செய்வது அவசியமாகும். விவசாய அமைப்புக்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஒருங்கிணைப்பு தேவை என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் வறட்சியை தாங்கும், வெப்பத்தை தாங்கும் மற்றும் வெள்ளத்தை தாங்கும் பயிர்களையும் விவசாயிகள் மேம்படுத்த வேண்டும்.

சூரிய சக்தியில் இயங்கும் நுண்நீர்ப்பாசனத்தை நோக்கிய முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகும். சொட்டு நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் துல்லியமான நீர்ப்பாசனம் இன்னும் பரவலாகவும், பயனுள்ளதாகவும் மாற்றப்பட வேண்டும். ” என்று தெரிவித்தார்.