Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம்: இஸ்ரேல் ஆதரவு; ஹமாஸ் மவுனம்; முஸ்லிம், அரபு நாடுகள் வரவேற்பு

வாஷிங்டன்: காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார்.  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு நெதன்யாகு மற்றும் இஸ்லாமிய, அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஹமாஸ் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகள் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர்.

இதில் ஏராளமான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக காசாவிற்குள் பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. சுமார் 2 ஆண்டாக நீடிக்கும் இப்போரில் காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் 66,000 பேர் பலியாகினர். காசாவின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் தகர்க்கப்பட்டுள்ளது. காசாவில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீன மக்கள் உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர்.

இதனால் இப்போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. தற்போது நடந்து வரும் ஐநா பொதுச் சபை கூட்டத்திலும் காசா போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் குரல் கொடுத்தனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக ஐநாவில் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் நேற்று அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது, காசா போரை முடிவுக்கு கொண்டு வரவும், காசாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கவும் 20 அம்ச திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார். இதற்கு நெதன்யாகு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகள் அனைத்தும் டிரம்ப் திட்டத்தை வரவேற்றுள்ளன.

காசாவை மறுகட்டமைப்பு செய்வதில் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது. ஆனாலும், டிரம்பின் போர் நிறுத்த பரிந்துரைகள் குறித்து ஹமாஸ் அமைப்பு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஹமாசின் பேச்சுவார்த்தை குழு 20 அம்ச திட்டத்தை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் உருவாகி உள்ளது.

* பிரதமர் மோடி ஆதரவு

பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதிபர் டிரம்பின் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது, பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும், மேற்காசிய பிராந்தியத்துக்கும் நீடித்த நிலையான அமைதியை, பாதுகாப்பை, வளர்ச்சிக்கான பாதையை வழங்குகிறது. சம்பந்தப்பட்ட அனைவரும் அதிபர் டிரம்பின் முயற்சிக்குப் பின்னால் ஒன்றிணைந்து மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தும் இந்த முயற்சியை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

* என்னென்ன பரிந்துரை?

டிரம்பின் 20 அம்ச திட்டத்தில் உள்ள முக்கிய பரிந்துரைகள்:

* காசா இனி தீவிரவாதம், பயங்கரவாதம் இல்லாத நாடாகவும், அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லாததாகவும் இருக்கும்.

* கடுமையாக பாதிக்கப்பட்ட காசா மக்களின் நலனுக்காக காசா மறுவடிவமைப்பு செய்யப்படும்.

* இந்த திட்டத்திற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும். வான்வழி, பீரங்கி தாக்குதல் உட்பட அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

* இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பகிரங்கமாக ஏற்றுக் கொண்ட 72 மணி நேரத்திற்குள், உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.

* பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டவுடன், 250 ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் 1,700 காசா மக்களை இஸ்ரேல் விடுவிக்கும்.

* அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின், ஆயுதங்களை கீழே போட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்புவதாக உறுதியளிக்கும் ஹமாஸ் போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். காசாவை விட்டு வெளியேற விரும்பும் ஹமாஸ் அமைப்பினர் விரும்பும் நாடுகளுக்கு செல்ல வழிவகுக்கப்படும்.

* இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், முழு உதவி பொருட்களும் உடனடியாக காசா பகுதிக்கு அனுப்பப்படும். உள்கட்டமைப்பு (நீர், மின்சாரம், கழிவுநீர்) மறுசீரமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் பேக்கரிகளின் மறுசீரமைப்பு மற்றும் இடிபாடுகளை அகற்ற தேவையான உபகரணங்கள் வழங்கப்படும்.

* காசா பகுதியில் விநியோகம் மற்றும் உதவிகள் இருதரப்பினரின் குறுக்கீடு இல்லாமல், ஐநா மற்றும் அதன் நிறுவனங்கள், ரெட் கிரசண்ட் மூலம் தொடரும்.

* காசா ஒரு தொழில்நுட்ப, அரசியல் சார்பற்ற பாலஸ்தீனிய குழுவின் தற்காலிக இடைக்கால நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும். இதனை சர்வதேச நாடுகள் அடங்கிய இடைக்கால அமைதி குழு மேற்பார்வையிடும். இக்குழு அதிபர் டிரம்ப் தலைமையில் செயல்படும்.

* மத்திய கிழக்கில் செழிப்பான நவீன நகரங்களை உருவாக்க உதவிய நிபுணர்கள் குழு மூலம் காசா மறுஉருவாக்கம் செய்யப்படும். டிரம்ப் பொருளாதார மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலம் நிறுவப்படும்.

* யாரும் காசாவை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள். வெளியேறவும், திரும்பி வரவும் முழு சுதந்திரம் வழங்கப்படும்.

* ஹமாஸ் மற்றும் பிற பிரிவுகள் காசாவின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது எந்த வடிவத்திலும் எந்தப் பங்கையும் கொண்டிருக்க மாட்டார்கள். சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட எந்த ராணுவ கட்டமைப்பும் மீண்டும் கட்டப்படாது.

* காசாவில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள அரபு மற்றும் சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து அமெரிக்கா தற்காலிக சர்வதேச படை (ஐஎஸ்எப்) உருவாக்கும்.

* இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்கவோ அல்லது இணைக்கவோ மாட்டாது.

* அமைதியான, வளமான வாழ்வுக்கான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்யும்.