நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் 2வது நாளாக நேற்று ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டங்கள் தொடங்கின. ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ்(22வயது, 2வது ரேங்க்), இத்தாலி வீரர் மேட்டியோ பெலுஸி(24வயது, 65வது ரேங்க்) ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்தனர். அதில் கார்லோஸ் அதிக அலட்டலின்றி ஒரு மணி 36நிமிடங்களில் 6-1, 6-0, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்றதால் மீண்டும் 3வது சுற்றில் விளையாட இருக்கிறார்.
அமெரிக்க வீராங்கனைகள் எம்மா நவர்ரோ(24 வயது, 11வது ரேங்க்), கேதி மெக்நல்லி(23வயது, 101வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். அதில் எம்மா ஒரு மணி 16நிமிடங்களில் 6-2, 6-1 என நேர் செட்களில் எளிதாக வென்று 3வது சுற்று வாய்ப்பை பெற்றார். அதேபோல் நடப்பு சாம்பியன் அரினா சபலென்கா(பெலாரஸ்), ஜாஸ்மின் பாலினி(இத்தாலி), மிரா ஆண்ட்ரீவா(ரஷ்யா), பார்போரா கிரெஜ்சிகோவா(செக் குடியரசு) ஆகியோர் பெண்கள் பிரிலும், பிரான்சிஸ் டியாஃபோ(அமெரிக்கா), கேமரான் நோரி(பிரிட்டன்), பெஞ்சமின் பொன்சி(பிரான்ஸ்) ஆகியோர் ஆண்கள் பிரிவிலும் 3வது சுற்றுக்கு தகுதிப் பெற்றனர்.
* வாசித்த ஜோகோவிச்
ஆண்களுக்கான 2வது சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 3-1 என்ற செட்களில் அமெரிக்க வீரர் ஸ்வஜ்டாவை வென்று, 3வது சுற்றுக்கு முன்னேறினார். ஆட்டத்துக்கு பிறகு தனது டென்னிஸ் மட்டையை வைத்து வயலின் வாசிப்பது போல் வெற்றியை கொண்டாடினார். ஆனால் மே மாதம் ஜெனீவா ஓபன் காலிறுதியின் முதல் செட்டில் 1-3என்ற புள்ளிக் கணக்கில் இத்தாலி வீரர் மேட்டீயோ அர்னால்டி இடம் பின்தங்கினார். அதனால் கோபமடைந்த ஜோகோவிச் தனது மட்டையை தரையில் அடித்து உடைத்தார். அதனால் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அந்த காலிறுதியில் மட்டுமல்ல, இறுதி ஆட்டத்திலும் வென்று ஜெனீவா ஓபன் சாம்பியன் ஆனார்.