நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதியில் 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் 22 வயதான அல்காரஸ், 7ம் நிலை வீரரான செர்பியாவின் 38 வயதான ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் கைப்பற்றினார். 2வது செட்டில் ஜோகோவிச் கடும் சவால் கொடுக்க டைப்ரேக்கர் வரை சென்றது. இந்த செட்டையும் 7(7)-6(4) என அல்காரஸ் தன்வசப்படுத்தினார். 3வது செட்டை 6-2 என அவர் எளிதாக கைப்பற்றினார். முடிவில் 6-4, 7-6 (7-4), 6-2 என அல்காரஸ் வெற்றிபெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
தோல்வி குறித்து ஜோகோவிச், கூறுகையில், ``இளம் வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடுகின்றனர்.
இன்று என்னால் முடியவில்லை. எனது சக்தி அனைத்தையும் இழந்துவிட்டேன். இருப்பினும் இந்த அளவுக்கு என்னால் விளையாட முடிகிறது என்று நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். டென்னிஸ் எப்போதுமே உடலைச் சார்ந்த விளையாட்டாக தான் இருக்கிறது’’ என்றார். தொடர்ந்து நடந்த மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர், 6-1, 3-6, 6-1, 6-4 என கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் வீழ்த்தினார். திங்கட்கிழமை அதிகாலை பைனலில் சின்னர்-அல்காரஸ் மோதுகின்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் நியூலாந்தின் எரின் ரூட்லிஃப், கனடாவின் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி ஜோடி 6-4, 6-1 என செக்குடியரசின் கேடரினா சினியாகோவா, அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.