நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னரை வீழ்த்தி, ஸ்பெயின் வீரர் காரலோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் நம்பர் 1 இடத்துக்கு அல்காரஸ் உயர்ந்தார். இந்தாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான, யுஎஸ் ஓபன், கடந்த ஆக. 18ம் தேதி துவங்கியது. போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், முதல் அரை இறுதிப் போட்டியில் கனடா வீரர் ஃபெலிக்ஸ் அகர் அலிஸிமேவை வீழ்த்திய, இத்தாலியை சேர்ந்த நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர் (24) இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதிப் போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்திய ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22) இறுதிப் போட்டி்கு தகுதி பெற்றார். இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த இறுதிப் போட்டியில் சின்னரும், அல்காரசும் மோதினர். முதல் செட்டில் அபாரமாக ஆடிய அல்காரஸ் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய சின்னர், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அதை கைப்பற்றினார்.
இருப்பினும், அடுத்த 2 செட்களிலும் ஆக்ரோஷமாக ஆடிய அல்காரசுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சின்னர் திணறினார். அந்த இரு செட்களையும் 6-1, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அல்காரஸ் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அல்காரஸ், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியை தொடர்ந்து, அல்காரஸ், தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்துக்கு மீண்டும் உயர்ந்தார். நம்பர் 1 இடத்தில் 65 வாரங்களாக நீடித்து வந்த சின்னர், 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.