ஐதராபாத்: அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த இந்திய மாணவர் சுட்டு கொல்லப்பட்டார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி.நகரை சேர்ந்தவர் பொலே சந்திரசேகர்(27). பல் மருத்துவரான இவர் முதுநிலை பல் மருத்துவ மேற்படிப்புக்காக கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு உள்ள பல்கலைகழகத்தில் படித்து வந்த சந்திர சேகர் டெக்சாஸில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சந்திரசேகர் பணியில் இருந்தார். அப்போது ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒருவர் சந்திரசேகர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அமெரிக்க போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சந்திரசேகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஐதராபாத்தில் வசித்து வரும் அவரது குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சரும் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏவுமான ஹரிஷ் ராவ் எல்பி நகரில் உள்ள சந்திரசேகரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் சந்திரசேகரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி தெலங்கானா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 3ம் தேதி கலிபோர்னியாவில் தொழில்நுட்ப பொறியாளராக வேலை பார்த்து வந்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது நிசாமுதீன்(30) என்பவர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். முகமது நிசாமுதீனுக்கும் அவரது அறையில் தங்கி இருந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின் போது போலீசார் நிசாமுதீனை சுட்டு கொன்றனர்.