சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மழை காரணமாக இன்று பொதுமக்களுக்கு மூடப்படுகிறது என அறிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில் சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மழை காரணமாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் பொதுமக்களுக்கு மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் இன்று பொதுமக்களுக்கு மூடப்படுகிறது. இன்றைய தினம் திட்டமிடப்பட்ட அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் (Consular Appointments) ரத்து செய்யப்பட்டு, புதிய தேதிக்கு மாற்றப்படும்.
ரத்து செய்யப்பட்ட சந்திப்புகளுக்கான புதிய தேதி மற்றும் வழிகாட்டுதல்கள் விரைவில் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, support-india@usvisascheduling.com என்ற மின்னஞ்சல் அல்லது +91 22 62011000 என்ற எண்ணை பயன்படுத்தி கொள்ளவும். கைரேகை பதிவு (Biometrics) சந்திப்புகள் தூதரக கட்டிடத்திற்கு வெளியே நடைபெறுவதால், மற்றொரு அறிவிப்பு வரும் வரை திட்டமிட்டபடி நடைபெறும். அமெரிக்க குடிமக்கள் இணையதளம், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் செய்திகளைப் பின்தொடர்ந்து வானிலை தொடர்பாக செய்திகளை அறிந்துகொள்ளவும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.