சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிந்தது. தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அமெரிக்க துணை தூதரகத்தில் சோதனை நடத்தியும் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அதேபோல், வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் வந்தது.
அதில், ஸ்டுடியோவில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் கண்டுபிடித்து கொள்ளுங்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. தகவல் அறிந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஸ்டுடியோ முழுவதும் தேடியும் அங்கும் வெடிகுண்டு சிக்கவில்லை. இதையடுத்து, மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். கடந்த 2 வாரமாக வெளிநாடுகளில் இருந்து மின்னஞ்சல் மூலம் சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் சென்னை காவல்துறை ஒன்றிய அரசு உதவியுடன் விசாரித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற மிரட்டல் விடுப்பவர்களை கண்டறிந்து, அவர்களது பாஸ்போர்ட்டை முடக்கி, கைது செய்து சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.