வாஷிங்டன்: சமீபத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களின் அனைத்து குடியேற்ற கோரிக்கைகளை கால வரையின்றி நிறுத்தி வைத்து அமெரிக்கா உத்தரவிட்டது. அதே நேரத்தில், க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களின் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். அமெரிக்காவுக்குள் செல்ல 19 நாடுகளுக்கு தடை உள்ளது. தற்போது அதன் பயண தடையை 30க்கு மேற்பட்ட நாடுகளாக விரிவுபடுத்த டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம், பயண தடையை 32 நாடுகளுக்கு அதிகரிக்க பரிந்துரைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது முன்னோர்கள் இந்த தேசத்தை ரத்தம், வியர்வை சிந்தி கட்டியெழுப்பினர். வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் நமது ஹீரோக்களை கொல்வதற்கோ, நமது கடின உழைப்பால் சம்பாதித்த வரி டாலர்களை உறிஞ்சுவதற்கோ அல்லது அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பறிப்பதற்கோ அல்ல’ என்று கூறியுள்ளார்.

