நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் இன்று, பெலாரசின் அரீனா சபலென்கா- செக் வீராங்கனை மார்கெடா வோன்ட்ரசோவா மோதவுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடந்தன. அந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் யுஎஸ் சாம்பியன்கள் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (27 வயது, 24வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் (21 வயது, 3வது ரேங்க்) மோதினர்.
இந்த போட்டியில் அபாரமாக ஆடிய ஒசாகா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியன் போலந்தின் இகா ஸ்வியாடெக் (24 வயது, 2வது ரேங்க்), 6-3, 6-1 என நேர் செட்களில் ரஷ்யாவின் ஏக்தரினா அலெக்சாண்ட்ரோவாவை (30 வயது, 12வது ரேங்க்) வீழ்த்தினார். 4வது சுற்றுப் போட்டிகள் முடிந்ததை அடுத்து, முதல் காலிறுதியில், அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா, செக் வீராங்கனை பார்பரா கிரெஜிகோவா மோதவுள்ளனர்.
இன்று நடக்கும் 2வது காலிறுதியில், பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, செக் வீராங்கனை மார்கெடா வோன்ட்ரசோவா உடன் களம் காணவுள்ளார். 3வது காலிறுதியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் மோதுவர். கடைசி காலிறுதியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, செக் வீராங்கனை கரோலினா முசோவா களம் காண்பர்.
சாதிக்க வயது தடை இல்லை: 45 ல் காலிறுதி வீனஸ் சாகசம்
தொடரின் வயதான வீராங்கனையும், யுஎஸ் ஓபன் ஒற்றையர், இரட்டையர் பிரிவு முன்னாள் சாம்பியனுமான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் (45), கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் (22) உடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். 3வது சுற்றில் ஒரு மணி 14 நிமிடங்களில் ஏகதரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷ்யா)/ஷூவாய் ஜாங் (சீனா) இணையை 6-3, 6-4 நேர் செட்களில் வீழ்த்தியது. அதன்மூலம் 2019ம் ஆண்டு சின்சினாட்டி ஓபன் போட்டிக்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மட்டுமின்றி, டபிள்யூடிஏ போட்டிகளிலும் வீனஸ் காலிறுதிக்கு இப்போதுதான் முன்னேறி இருக்கிறார்.
யூகி பாம்ரி அபாரம்
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் யூகி பாம்ரி (இந்தியா)/ மிக்கேல் வீனஸ் (ஆஸ்திரேலியா) இணை, கோன்சாலோ எஸ்கோபா (ஈகுவடார்)/மிகுவேல் ரெய்ஸ்(மெக்சிகோ) இணை மோதியது. அதில் இந்திய இணை ஒரு மணி 25 நிமிடங்களில் 6-1, 7-5 என நேர் செட்களில் வென்று காலிறுக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறியது.