அமெரிக்க தூதரகம் முற்றுகை முயற்சி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பரிதாப பலி: பாகிஸ்தானில் பெரும் கலவரம்
இஸ்லாமாபாத்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் நடைபெறும் பேரணியில் வன்முறை வெடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நீடிக்கிறது. இஸ்ரேலின் காசா நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-லப்பைக் (டி.எல்.பி) என்ற இஸ்லாமிய அமைப்பு கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மாபெரும் போராட்டத்தை நடத்தியது.
இஸ்லாமாபாத்தில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை நோக்கிய இந்த பேரணியில் வன்முறை வெடித்ததில், பஞ்சாப், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய பகுதிகளில் 11 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்; 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதனால், நாடு தழுவிய அளவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை அடுத்து, இஸ்லாமாபாத் நோக்கிய பேரணியை தற்காலிகமாக நிறுத்துவதாக டி.எல்.பி தலைவர் சாத் ரிஸ்வி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, இணைய சேவைகள் பகுதியளவு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், லாகூர் மற்றும் முரிட்கே ஆகிய பகுதிகளில் இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும், பாலஸ்தீனத்திற்கு உதவிகளை அதிகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். பதற்றம் நீடிப்பதால், நகர்ப்புறங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, ராவல்பிண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டன. இருப்பினும், முக்கிய சந்திப்பான ஃபைசாபாத் உட்பட சில பகுதிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.