Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உப்பிலிபாளையம் சிக்னலில் போக்குவரத்து நெரிசல்

*வாகன ஓட்டிகள் அவதி

*போக்குவரத்து போலீசார் திணறல்

கோவை : கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் திறந்த பிறகு உப்பிலிபாளையம் சிக்னல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோவை மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களுக்கு மேலாக டவுன்ஹால், காந்திபுரம், பெரியகடை வீதி, கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ்.புரம், புரூக்பீல்டு ரோடு, கூட்செட் ரோடு, அவிநாசி ரோடு, அண்ணாசிலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நிலவி வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்துகள், கார்கள், ஆம்புலன்ஸ்கள் செல்வதிலும் கடும் சிக்கல் இருந்து வருகிறது.

மேலும்,கோவை அவிநாசி ரோட்டில் நிலவும் சாலை போக்குவரத்தை சரிசெய்யும் வகையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.1,791.23 கோடி மதிப்பில் ஜி.டி. நாயுடு மேம்பாலம் கடந்த வாரம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த மேம்பாலம் திறந்த பிறகு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தரப்பில் கூறுகின்றனர்.

குறிப்பாக, மேம்பாலம் இறங்கும் பகுதியில் உள்ள உப்பிலிபாளையம் சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய ரவுண்டானா காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேம்பாலம் திறப்பதற்கு முன்பு நஞ்சப்பாரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் அவிநாசி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், ஆடிஸ் வீதி வழியாக வரும் வாகனங்கள் கலெக்டர் அலுவலகம், ரயில்நிலையம், அண்ணாசிலை, லட்சுமி மில்ஸ் போன்ற பகுதிகளுக்கும், ரவுண்டாவை பயன்படுத்தி மரக்கடை, கூட்செட்ரோடு, பூமார்க்கெட், புரூக்பீல்டு சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்கும் எளிதாக சென்று வந்தன.

பல ஆண்டு காலமாக வாகன ஓட்டிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த வாரம் ஜி.டி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டது.

இதனால், உப்பிலிபாளையம் இறங்கு தளத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அவிநாசி மேம்பாலம், நஞ்சப்பாரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ரவுண்டானாவை பயன்படுத்தாமல் அண்ணாசிலை வரை சென்று மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையை பயன்படுத்தும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இந்த மாற்றம் காரணமாக அண்ணாசிலை அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நேற்று ரவுண்டானா பழைய முறைப்படி மாற்றப்பட்டது. இங்கு போக்குவரத்து நெரிசலை தடுக்க உப்பிலிப்பாளையம் இறங்குதளம், ஏறுதளம் மற்றும் ஆடிஸ்வீதி செல்லும் வழி, சி.எஸ்.ஐ பள்ளி அருகே உள்பட 6 இடங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்போதும், போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. தவிர, அதிகாரிகள் குழுவினர் போக்குவரத்து நெரிசலை தடுக்க எது ேபான்ற மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது தொடர்பாக ஆய்வும் மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, மீண்டும் அந்த பகுதியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என தெரிகிறது.

இந்த பெரிய அளவிலான ரவுண்டானா பகுதியில் எது போன்ற மாற்றங்களை செய்தால் போக்குவரத்து குறையும் என்பதை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது. தினமும் ரவுண்டானா பகுதியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி போலீசார் ஏற்படுத்தி வரும் மாற்றத்தின் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை காலம் என்பதால் வாகன நெரிசல் ஏற்பட்டு இருக்கலாம் எனவும், பண்டிகை காலம் முடிந்த பிறகே தீர்வு காண முடியும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, அடுத்த சில நாட்கள் உப்பிலிபாளையம் சிக்னல் பகுதியில் மாற்றங்கள் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உப்பிலிபாளையம் சிக்னல் ரவுண்டானாவில் விவகாரத்தில் மாற்றுவழி தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் குழப்பம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.